பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீர்ப்பளியுங்கள்!

61


கள் கால்வயிற்றுக்குக் காலம் முழுவதும் உழைக்கிறார்கள். சரி, சாக வேண்டியதுதான் என்று எண்ணி ஏங்கினேன். நான் மாண்டுபோனால் மங்காவின் கதி என்னாகும்? என் ரங்கன், நாலு வயதுப் பையன், அவன் தெருவிலே அலைவான். இந்த லட்சணத்திலே அவள் எட்டாம் மாதம்! இந்த உலகிலே, என்னைக் காப்பாற்ற, மரணத்திலிருந்து என்னைத் தப்பவைக்க யாரும் இல்லை, மங்கா அழுதபடியே இருந்தாள். அந்த நேரத்திலே, புண்யமூர்த்தி மகாலிங்கம் வந்தான். அவன் பூர்ணாயுசுடன் நோய் நொடியின்றி வாழவேண்டும். “வரதா! உனக்கு இவ்வளவு அதிகமாக ஜுரம் என்று எனக்குத் தெரியாமல் போச்சே” என்று விசனித்தான். “அக்கா! அழாதே, ஆண்டவன் நல்வழி காட்டுவார்” என்று என் மனைவிக்குத் தேறுதல் கூறினான். அவனுடைய அன்பு எனக்கு ஆயிரம் டாக்டர்களின் உதவியைவிட மேலானதாக இருந்தது. உயிருக்கு ஊசலாடிக்கொண்டு, ஊரிலே ஒருவர் உதவியின்றி வேலை செய்துவந்த இடத்திலே கைவிடப்பட்ட இந்தத் தர்மக்கட்டையிடம் தயை காட்டி, ஆறுதல் கூறினான். அவனுடைய தர்ம சிந்தனையைப் பார்த்தபோது, கைதூக்கிக் கும்பிட்டேன். அதுவரையிலே அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டினாள், என் மனைவி.

“ஆண்டவன் எனக்கு என்ன வழியப்பா காட்டப் போகிறார்? ஆண்டவன் இருக்கிறானா? எங்கே இருக்கிறான்! இதோ என் புருஷர் வதைக்கிறார். கண்ணைத் திறக்கிறேன்! கலம் தண்ணீர் விடுகிறேன். தெய்வம் என்ன செய்கிறது? தெருவிலே ஏழைகளை அலையவைக்கிறது. தெய்வ-