பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீர்ப்பளியுங்கள்

65


வழக்கோ விளக்கமாக இருக்கிறது. அவன் கள்ளன், அவனே குற்றத்தை ஒப்புக்கொண்டுமிருக்கிறான். இப்படிப்பட்ட யோக்யன் ஏன் அயோக்கியனானான்!” என்று மருதவாணர் கேட்டார். “எனக்குத் தலை சுழலுகிறது இதைக் கேட்க” என்று நான் சொன்னேன். உண்மையாகவே எனக்கு அப்படித்தான் இருந்தது.

“நம்ம வீட்டுத் தோட்டக்காரன் இருக்கிறானே துரைசாமி, அவன் சொன்னதோ இதை விட அதிகம். மகாலிங்கம் எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்வானாம். யாராவது வீதியிலே, தூக்கமுடியாமல் பாரமான மூட்டையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டால் அவன் தான் உதவிக்கு வருவானாம். போக்கிரி எவனாவது யாரிடமாவது வம்புக்குப் போனால் இவன் போய்ச் சமாதானம் செய்வானாம். அந்தப் போக்கிரி அடித்தால்கூடப் பட்டுக் கொள்வானாம். அனாதைகள் இருந்தால், வீடுவீடாகப் பிடிசோறு எடுத்து, அவர்களுக்கு உணவளிப்பானாம். ஒரு தடவை, நம்ப தோட்டத்திலே தேங்காய் திருடிவிட்டானாம் எவனோ. மகாலிங்கம்தான் திருடினான் என்று நினைத்துக் கொண்டு, துரைசாமி, மகாலிங்கத்தைச் சண்டைக்கு இழுத்துப் பலமாக அடித்துவிட்டானாம். மகாலிங்கம் அவ்வளவு அடியும் பட்டுக்கொண்டு, சத்தியமாக நான் திருடவில்லை என்று சொன்னானாம். கடைசியில் திருடன் வேறு ஒருவன் என்று தெரிந்ததாம். நம்ம துரைசாமிக்கு மனந்தாளாமல், மகாலிங்கத்திடம் போய் மன்னிப்புக் கேட்டானாம். “இது என்ன பிரமாதம்! என்னமோ விஷக்கடிவேளை” என்று மகாலிங்கம் பொறுமையாகப் பேசினானாம். அப்படிப்பட்ட

9