பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சிறுகதைகள்


பொறுமைசாலியை நான் கண்டதே கிடையாதுங்க. ரொம்ப யோக்யன், எப்போதாவது அதிகக் கஷ்டமான வேலை செய்தால் குடிப்பான். ஆனால் குடித்துவிட்டுக் கூத்தாடுகிறவனுமல்ல. ‘என் கையிலே பணம் ஏராளமாக இருந்தால் ஏழைகளுக்கெல்லாம் உபகாரம் செய்வேன். நான் இல்லாதவன், என்ன செய்வது’ என்று ஏக்கப்படுவானாம் மகாலிங்கம்” என்று கூறினார் மாஜிஸ்ட்ரேட், துரைசாமி சொன்னான் என்று.

“ஐயோ பாவம்! இப்படிப்பட்டவனுக்கு ஏன் கெட்ட எண்ணம் பிறந்தது” என்று நான் பரிதாபத்துடன் கேட்டேன்.

“அதை ஏன் கேட்கிறாய்! அதைச் சொன்னால் நீ மூர்ச்சையாகிவிடுவாய். எங்கெங்கு விசாரம் இருந்ததோ அங்கெல்லாம் மகாலிங்கம் முன்னாலே நின்று உதவி செய்வான். நோயாளிகளுக்கு மருந்து வாங்கித் தருவான். ஏழையின் வீடு இடிந்தால், இவன் கூலி இல்லாமல், வெறும் கூழுக்கே வேலை செய்வான். குழந்தை ஏதாவது தவறி வந்து விட்டது என்றால், வீடு கண்டுபிடித்துக் கொண்டு போய்ச் சேர்க்கிற வரையிலே, வேறு வேலையைக் கவனிக்க மாட்டான். இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்ததால் அவனுக்குக் கிடைக்கும் வேலையும் நிலைப்பதில்லை. பரோபகாரி வருகிறார், இவருக்கு வேலை வெட்டி எதற்கு? என்று கண்டித்து அனுப்பிவிடுவார்கள். குடும்பமோ பெரிது. அதை நடத்திக்கொண்டு போவதே சிரமம். தன் சக்தியையும் உணராமல் உதவி செய்யும் சுபாவம். அதற்கு வேறு செலவு. இந்த நிலையிலே, நடந்திருக்கிறது இவன் வாழ்க்கை. இச்