பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீர்ப்பளியுங்கள்!

69


வில்லை. அதுமட்டுமல்ல முலாம் பூசுவதற்கான சாமான்கள் மகாலிங்கத்தின் வீட்டிலிருந்து போலீசார் கண்டுபிடித்து எடுத்திருக்கிறார்கள்” என்று கூறினார். “அந்தப் பர்மா அகதியாக வந்த புரட்டனே, முலாம் பூசும் சாமானை அங்கே வைத்திருப்பான்” என்று நான் கூறினேன். “இருக்கலாம்! ருஜு வேண்டாமா? மகாலிங்கம் நிரந்தரமான தொழிலற்றவன், அவன் முலாம் பூசிய நகையை விற்க முயற்சித்தான். அதை அவனே ஒப்புக்கொள்கிறான். அவன் வீட்டிலே முலாம் போடும் கருவி கிடைத்தது. தண்டனைக்கு ஏற்றபடி ருஜுகள் உள்ளனவே, நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.

“சிக்கலான பிரச்னைதான்!” என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. நானா தீர்ப்பளிக்க வேண்டியவன்! என் தீர்ப்பு நெடுநாட்களுக்கு முன்பே பதிவாகிவிட்டது. ஒரு வழக்குக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. அதாவது, ஏழைகள் செய்யும் குற்றங்களுக்குக் காரணம் அவர்களின் ஏழ்மை. ஆகவே தண்டிக்கப்படவேண்டியது ஆட்களல்ல, பொருளாதார பேத அமைப்பு முறை. இது என் தீர்ப்பு. ஆனால் மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, சட்டப்படி, இந்த மகாலிங்கம் வழக்கிலே, என்ன தீர்ப்பு அளிப்பது என்று கேட்கிறார்! சொல்லுங்கள் பார்ப்போம்!!