பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்குரங்கு


அவருக்கு அது புதிதுமல்ல; பழக்கமுண்டு! இரண்டாவதாகவே, இந்த இன்பவல்லியைத் தேடினார். முதலாமவள் தனது மூலக்கருத்தை கூறிட மார்க்கமேயின்றி, மூண்ட கோபத்தையும் சோகத்தையும் மூடிமூடி வைத்து, மங்கி மாண்டாள் பாவம்! அதனாலென்ன? அவள் “வினை” அது!

மாகாளிப்பட்டி மகாலிங்க ஐயர் மகாசமர்த்தர். வேத சாஸ்திரத்தில் விற்பன்னர் என்று வேதியக் கூட்டம் கூறும். மற்றதுகளுக்கு என்னது தெரியும் அந்த வேத பாஷை! எனவே “அப்படிங்களா! அவர் முகத்திலே சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்” என்று கூறினர். அவர் தான் கிளம்பினார், முகூர்த்தம் நிச்சயிக்க. வந்தவருக்கு மிராசுதார் உபசாராதிகள் செய்து குசலம் விசாரித்து குருக்கள் வீட்டிலே போஜனை ஏற்பாடு செய்து வைத்தார். பிராமணாளிடம் விசேஷ மரியாதை இரு குடும்பத்திலும். “இலட்சுமி புத்ராள், ஞானஸ்தாள்” என்று வயிறார உண்ட புரோகிதர் வாயாரப் புகழ்ந்தார். வந்த காரியத்தைக் கூறினார். வம்பு விளைந்ததை மிராசுதார், அப்போதுதான் உணர்ந்தார். “ஏதோ சொன்னேன், ஆனால் மாகாளிப்பட்டியார் பிடிவாதமாக இருப்பாரென்று கருதவே இல்லையே. மதுரத்துக்கும் அவருக்கும் வயதிலே, அதிக வித்தியாசமிருக்குமே” என்று கூறினார். புன்னகை புரிந்தார். புரோகிதர் “வயது வித்தியாசம் பார்த்தால், வம்சாவளிக்கு ஏற்றவிதமாகக் காரியம் நடக்கவேண்டாமோ? வயதைப் பற்றி தள்ளுங்கோ, ஸ்ரீராமரை விட சீதா பிராட்டியார் வயதிலே மூத்தவளென்று தான் இதிகாசம் கூறுகிறது. மாகாளிப்பட்டி சம்பந்தம்