பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சிறுகதைகள்


குள் தன் மனைவியைப்பற்றி, “அந்தச் ‘சுடுமூஞ்சி’ கஷாயம் போட்டு வைக்குதோ, இல்லைனா சினிமாவுக்குக் கிளம்பிவிட்டதோ?” என்று சொல்லிக் கொண்டார். இவ்வளவு அர்ச்சனைகளும், அன்று மாலை 6 மணிக்கு நடந்தேறிய பிறகு, “தின்னுக்கூலி”யைக் கடையைப் பூட்டிக்கொண்டு போகச்சொல்லிவிட்டுச் “சோம்பேறி” கட்டிவைத்திருந்த மாலையை வாங்கிக் கொண்டு, “பணம் பிடுங்கி” நின்று கொண்டிருந்த கோயிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு, “அல்லி”க்குச் செலுத்த வேண்டிய காணிக்கையைக் கொடுத்துவிட்டு, அவள் அடிவயிறு வலி என்று அலறியது கேட்டு, அதற்கு வைத்ய முறை கூறிவிட்டு, வீட்டுக்குள் புகுந்து “சுடுமூஞ்சி” தந்த கஷாயத்தைக் குடித்துவிட்டு, “அப்பனே! முருகா” என்று கொட்டாவி கலந்த குரலால் பஜித்துக்கொண்டே படுக்கையில் புரண்டுக்கொண்டிருந்தார், அரிசி மண்டி ஆறுமுக முதலியார்.

ஒவ்வொரு நாளும் அவர் கடையில், ‘அரிசி’ வாங்கிக் கொண்டு போகிறவர்கள் தரும் ‘அர்ச்சனை’யையும், அவர்களுக்கு இவர் தரும் ‘அர்ச்சனை’யையும், தொகுத்துக் கூறினால், அகராதி ஆகிவிடும்.

“இது எந்தப் பாவி கடை அரிசி? கல்லுமாதிரி இருக்கே, வேகவே மாட்டேனெங்குதே” என்பது அடுப்பறை அர்ச்சனை. “அந்த மஞ்சக் கடுதாசிக்குக் கடன் கொடுத்தா பணம் எப்பவரும்?” இது பணத்திலே குறியாக முதலியார், வாடிக்கைக்காரனுக்குத் தரும் அர்ச்சனை. இவ்விதம், விதவிதமான அர்ச்சனைகளைப் பெற்றுக்கொண்டும், வழங்கிக் கொண்டும் காலையிலே