பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

சிறுகதைகள்


வந்தது. “உன் வீட்டிலே என்ன தடை விதித்தாலும் நீ பயப்படாதே இராமி! நான் எப்படியும் உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன், எங்க பட்டணத்து மாமன் வரட்டும், அவரைக் கொண்டு உங்க அப்பாவுக்குச் சொல்லச்சொல்லிக் கலியாணத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்கிறேன். இல்லைன்னா என் பேரு, ஏகாம்பரமா, பாரு” என்று அவன் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தான். அதனால் இராமிக்கு நம்பிக்கை, சந்தோஷம். ஏகாம்பரத்தை எப்படியும் பெறமுடியும் என்று எண்ணிக் கொண்டாள்.

இப்போதும் அவனுக்குப் பெயர் ஏகாம்பரமாகத்தான் இருந்தது. இராமியோ அரிசி மண்டி ஆறுமுக முதலியாருக்கு இரண்டாந் தாரமாகி விட்டாள். அன்று மண அறையிலே துக்கம் மட்டுந்தான் இருந்தது. புருஷன் வீடு புகுந்ததும், கோபமும் அவள் மனதிலே புகுந்தது. ஏன்? சாந்தி முகூர்த்தத்தன்று கூறினார் ஆறுமுக முதலியார் ஒரு இரகசியத்தை, தன் சாமர்த்தியத்தை விளக்க.

“இராமி! இதோ, இப்படிப் பாரு, அடடா! இவ்வளவு வெட்கமா? நான் என்ன வாலிபனாடியம்மா? உன்னைப்போல, பிகுவு தளுக்குச் செய்ய” என்று ஆரம்பித்தார், சரசப் பேச்சு.

இராமி ஒன்றும் பேசவில்லை. எந்த இராமிதான் பேச முடியும்!

“முதலியாரே! இந்த அரிசி நல்லா இல்லையே, வேறே கொடுங்களேன்” என்று வாடிக்கைக்காரர் மல்லாடி நிற்பார். ஆறுமுக முதலியார் ‘சரி’ என்று கூறுவாரா, எவ்வளவோ சமாதானம் கூறுவார், அரிசியைத் துடைத்துக் காட்டுவார், வாயிலே கொஞ்சம் போட்டுக் காட்டுவார்,