பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சிறுகதைகள்


பாட்டு. அரைகுறையாகத்தான் பாடினார். வேதத்தைப் “பாடு பாடு” என்று கேட்டு, அவள் அரை மனதுடன் பாடிய பாட்டுத்தானே அது.

ஏகாம்பரத்தைப் பற்றி மேற்கொண்ட ஏதாவது தகவல் கிடைக்காதா என்று ஏங்கினாள் இராமி. எப்படி கேட்க முடியும்! ஏன், தன்னைக் காதலித்தவன், பட்டணத்து மாமனை தூது அனுப்பி, தன் தகப்பனாரின் மனதைக்கூட மாற்றிவிட்டு, ஜாதகத்தையும் வாங்கிக் குருக்களிடம் காட்டியவன் திடீரென்று, அந்தப் பெண் எனக்கு வேண்டாம் என்று கூறினான் என்பது இராமிக்கு அன்றுவரை விளங்கவேயில்லை. அந்த இரகசியத்தை அறிந்தவரோ, பாடுகிறார், அதுபற்றி பேசாமல். அவருக்கு அது இன்ப இரவு! அவளுக்கு அப்படியா?

பாடி முடித்தார். அவரால் தன் வெற்றிப் பிரதாபத்தைக் கூறாமலிருக்க முடியவில்லை. ‘இராமி! ஒரு கதை சொல்லேன்’ என்றார்; ‘தெரியாது’ என்று ஜாடை காட்டினாள் இராமி. ‘நான் சொல்லட்டுமா ஒரு கதை?’ என்று கேட்டார். அவள் சொல்லச் சொல்லவில்லை; அவரே சொல்ல ஆரம்பித்தார்.

ஒரே ஒரு ஊரிலே ஒரு பெண். உன்னைப் போலத்தான் நல்ல அழகு, அவ சிரிச்சா, கன்னத்திலே குழி விழும், என்று கூறிக்கொண்டே, கன்னத்துக்குழியைத் தேடினார், இல்லை! அவள் சந்தோஷத்தில் இருந்தால்தானே! அந்தக் கன்னத்திலே ஏகாம்பரம் தன் உயிரையே வைத்திருந்தான் என்ற நினைப்பிலே அவள் சித்தம் சென்றுவிட்டது. கதையைத் தொடர்ந்து கூறலானார் மாப்பிள்ளை.