இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மணியின் பதில் மாமாவுக்கு வேடிக்கையாக இருந்தது.
“உண்மைதான், மணி,. ஆனால் மிட்டாய் எப்போ கொடுக்கிறாங்க?”
மாமா வினயமாய் மணியைக் கேட்டார்.
“விழா முடியறப்போ, கொடுப்பாங்க!”
மணி உடனே பதில் சொன்னான்.
“அதுக்கு முன்னாலே என்ன என்ன நிகழ்ச்சிகள் நடக்கும்?” மாமா கேட்டார்.
இதற்குப் பதில் சொல்ல கோமதி முந்திக் கொண்டாள்.
“முதல்’லே கொடி ஏற்றுவாங்க. அப்புறம் சுதந்திர தினவிழா நோக்கம் பற்றி பேசுவாங்க, அதன்பிறகு தேசியகீதம் பாடப்படும். கடைசியாக எல்லோருக்கும் இனிப்புத் தருவாங்க.”
கோமதியின் பதில் மாமாவுக்குத் திருப்தியாக இருந்தது. தொடர்ந்து அவர் கேள்வி கேட்டார்:
“சுதந்திர தினம், குடியரசு நாட்களில் கொடி ஏற்றி விழா கொண்டாடறோம். அப்போ, கொடி வணக்கம் செய்யறோம். அவ் வணக்கம் ஏன் செய்யறோம்’னு தெரியுமா?”