பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14


சிறந்த மரியாதை காட்ட வேண்டும். அது நம் அனைவரின் இன்றியமையாக் கடமை. மேலும், நம் தேசியக் கொடி நம் மக்களின் ஒற்றுமை, தூய்மை, அகிம்சை ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்கிறது...”

மாமா முடிக்கும்முன் ரகு பேசினான்:

“சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவின் போது கொடியேற்றி வைத்த தலைமையாசிரியர் கூட இதையேதான் சொன்னார், மாமா.”

மாமா தொடர்ந்து விளக்கினார்:

“கொடியேற்று விழாவின் நோக்கமும் இது தான். அப்போது தேசியக் கொடியின் சிறப்பு விளக்கப்பட வேண்டும். இக் கொடியைப் பெற, நாட்டுக்கு உழைத்தவர்கள் போற்றப்பட வேண்டும். நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், பொருளை இழந்தவர்கள், சுக வாழ்வைத் துறந்து சிறை சென்ற தியாகிகள் அனைவரும் நினைவுகூரப்பட வேண்டும். தேசியக் கொடியைக் காக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நாட்டின் சுதந்திரச் சின்னமே நம் தேசியக் கொடிதான்” என்று விரிவாக விளக்கிச் சொன்னார் மாமா.

“தேசிய கீதமும் அப்படித்தானே, மாமா?”