பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வியாபாரியின் மூடத்தனத்தைஅறிந்த மெளனசாமி, சூழ்ச்சி செய்ய தீர்மானித்தான்.

“வியாபாரியே! உன்னுடைய சொத்து சுகம் யாவும் அழிந்து, உனக்கு மரணம் நேரப் போவதை ஞானப்பார்வையினால் உணர்ந்தேன், அதனால், என்னை மறந்த நிலையில் மெளனம் கலைந்து, ‘கடவுளே’ என்று கூறிவிட்டேன்” என்றான் மெளனசாமி.

‘சொத்து, சுகம் அழிவு, மரணம்’ என்ற சொற்களைக் கேட்டதுமே வியாபாரி நிலைகுலைந்து, தள்ளாடிய நிலையில், “சுவாமி இதற்கு ஒரு பரிகாரம் கூறி, என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்ற மன்றாடினான்.

மெளனசாமி கண்களை முடி, சிறிது நேரம் யோசித்து, வியாபாரி, தான் விரித்த வஞ்சகவலையில், சரியாக விழுந்து விட்டான் என்பதை அறிந்து, உள்ளம் பூரித்தான்.

“நீ மிகவும் நல்லவன், நீண்ட காலம் சொத்து சுகத்துடன் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கூறுகிறேன். உன் பெண்ணுக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டது. அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால், அன்று இரவே அவன் கணவனை இழந்துவிடுவாள். உனக்கும் மரணம் நேரிடும். ஆகையால், உன் மகளை ஒரு கூடையில் வைத்து மூடி, அதன் மேலே ஒரு விளக்கை ஏற்றிவைத்து, இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு கங்கையில் மிதக்க விடு” என்று கூறி புறப்பட்டு விட்டான் மெளனசாமி.

அவன் சொன்னபடியே வியாபாரி செய்தான். கங்கையில் வியாபாரியின் மகளுடன் கூடை மிதக்கிறது.

மெளனசாமி ஆவலுடன் வேறு ஒரு பகுதியில் காத்திருக்கிறான்.