பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

முடிச்சை கழுத்தில் மாட்டிக் கொண்டு எட்டுமா என்று சோதித்துப் பார்த்தான்.

அந்தச் சமயம் சித்திராங்கி, படீரென்று மிருதங்கத்தை காலால் உதைத்துத் தள்ளிவிட்டாள். சுருக்கு முடிச்சு தெருப் பாடகனின் கழுத்தை நெறித்தது.

தனக்கு வந்த ஆபத்தை சமயோசிதமாக நீக்கிக் கொண்ட சித்திராங்கி, மகிழ்ச்சியோடு பயணத்தைத் தொடர்ந்தாள்.

கருமி பறிகொடுத்தான்; சமயோசித புத்தியினால் அவள் தப்பித்துக் கொண்டாள்.

4

இளவரசனின் தியாக உள்ளம்


ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன், திடீரென்று இறந்து விட்டான். அந்த அதிர்ச்சியில் ராணியும் இறந்து போனாள். அரசனின் ஒரே வாரிசான இளவரசனுக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.

தாய் தந்தையரை இழந்த துக்கம் இளவரசனை துயரத்தில் ஆழ்த்தியது. அரச குருவிடம் சென்று, “குருவே! துக்கம் எதனால் ஏற்படுகிறது? துக்கம் உண்டாகாமல் வாழ வழி என்ன?” என்று கேட்டான் இளவரசன்.

“இளவரசே! வழி வழியாக வருவது பாசம்! பாசத்தின் விளைவு துக்கம்; பாசத்தை நீக்கி விட்டால், துக்கம் உண்டாகாது” என்றார் அரச குரு.