பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

“பாசத்தை நீக்குவது எவ்வாறு?” என்று கேட்டான் இளவரசன்.

“வீடு, மனைவி, மக்கள், சுற்றம், செல்வம், ஆடை, ஆபரணம் போன்ற அனைத்தும் பாசமே! ஒன்றைத் தொடர்ந்து ஒன்று இழுத்துக் கொண்டே செல்லும்” என்றார் அரச குரு.

அவர் சொன்னது இளவரசனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.

உடனே இளவரசன் அரண்மனைக்குச் சென்று, அரச உடைகளையும், ஆபரணங்களையும் களைந்து விட்டான். நான்கு முழ வேட்டி ஒன்றை உடுத்தியபடி, அரண்மனையை விட்டு வெளியேறினான்.

அரண்மனையில் உள்ளவர்களும், நகர மக்களும் இளவரசனின் துறவுக் கோலத்தைக் கண்டு வருந்தினர். சிலர் வியப்புற்றனர்.

கையில் ஒரு பாத்திரத்தை ஏந்தியபடி, கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தான் இளவரசன், எந்த வீட்டின் முன்னேயும் நின்று பிச்சைகேட்பதில்லை, எவரேனும் வந்து பிச்சை இட்டால், ஏற்பான்.

தான் உண்டது போக, எஞ்சியதை காகங்களுக்கும் நாய்களுக்கும் போட்டு விடுவான்.

இரவு வேளையில் மரத்தடியிலோ, வீட்டுத் திண்ணையிலோ படுத்து உறங்குவான். காலையில் எழுந்து புறப்பட்டு விடுவான்.

இப்படியாக, ஒரு ஊரில் அவன் போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு வணிகனின் மனைவி அவனைக் கண்டு, உண்வு அருந்த அவனை வீட்டுக்குள் வருமாறு அழைத்தாள்.