பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

“எந்த வீட்டிற்குள்ளும் நுழைவது இல்லை” என்று சைகையால் காட்டி விட்டு, அவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அவனுடைய அழகான தோற்றத்திலும், தாமரை மலர் போன்ற கண்களிலும் மனதைப் பறி கொடுத்தாள் வணிகனின் மனைவி. அவள் உள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், அவன் பின்னே ஓடி, “இத்தகைய பேரழகு பொருந்திய நீ பிச்சை எடுப்பானேன்? எந்தப் பெண்தான் உன் தாமரைக் கண்களைக் கண்டு மயங்காமல் இருக்க முடியும்?” என்று மருகினாள்.

அவள் கூறியதைக் கேட்டதும், “தாயே! இந்தக் கண்கள் தானே உன்னை மயங்கச் செய்தன? இதோ பார்!” என்று கூறி, உடனே ஒரு கண்ணை தன் விரலால் தோண்டி எடுத்து, அவளிடம் காட்டி, “இப்போது நன்றாகப் பார்! இந்தச் சதை துண்டா உன்னை மயக்கிற்று?” என்று கேட்டான் துறவியான இளவரசன்.

வணிகனின் மனைவி, அழகு மயக்கத்திலிருந்து விடுபட்டு, “நீங்கள் ஒரு கண்ணை இழப்பதற்குப் பாவி நான் அல்லவா காரணமானேன்” என்று கதறி, அவன் காலில் விழுந்தாள்.

“தாயே! நீ எனக்குத் தீமை எதுவும் செய்யவில்லை. என் கண்ணைக் கெடுக்கவில்லை. மாறாக, எனக்குப் பொறுமையைப் போதித்து விட்டாய்” என்று கூறி துறவுக் கோலம் பூண்டிருந்த இளவரசன் புறப்பட்டான்.

துறவுக் கோலம் கொள்வதற்கு, மனவலிமை, உள்ளத் தூய்மை மிக அவசியமானதாகும்.