பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


ஒரு நாள், மிகுந்த ஆடம்பரமான உடைகளை அணிந்து கொண்டான் தந்திரவாணன். நேராக அரண்மனைக்குச் சென்று அரசனை தனிமையில் கண்டு, தான் ஒரு இரத்தின வியாபாரி என்றும், பல நாட்டு அரசர்களைக் கண்டு வந்திருக்கிறேன் என்றும் கூறினான். இப்பொழுது இந்த நகரத்தில் தங்க உத்தேசித்திருக்கிறேன். தினமும் அரசசபை கூடும்முன் சில நிமிடங்கள் தங்களிடம் பேசுவதற்கு அனுமதி தரவேண்டும். அதற்காக ஐநூறு பவுன்கள் தங்களுக்குத் தந்து விடுகிறேன்" என்று வேண்டிக் கொண்டான் தந்திரவாணன்.

அவனுடைய உடை, பேச்சு ஆகியவற்றைப் பார்த்து, அவன் ஒரு பெரிய இரத்தின வியாபாரிதான் என்று நம்பினான் அரசன். அதோடு தினம் ஐநூறு பவுன் கிடைக்கும்போது அவனுக்குப் பேட்டி அளிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று சம்மதித்து விட்டான் அரசன்.

மறுநாள் தந்திரவாணன் ஆடம்பர உடையில் சபை கூடுமுன் வந்து, அரசனிடம் ரகசியமாக சில வார்த்தைகள் கூறிவிட்டுப் போய்விட்டான் அவன் கூறியது அரசனுக்குப் புரியவில்லை. ஆனால், தந்திர வாணன் சிரித்துக் கொள்வான்.

சபை கூடியது அமைச்சர்கள், பிரதானிகள், உயர் அதிகாரிகள் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். மூன்றாம் நாள், தந்திரவாணன் வந்து, அரசனுடன் கிசுகிசு என்று பேசுகையில், ஒரு அமைச்சனை கூர்ந்து பார்த்துப் பேசினான் பிறகு, சிரித்தபடியே சென்றான், தந்திரவாணன் யார்? அரசனிடம் தினம் வந்து என்ன பேசிவிட்டுப் போகிறான் என்பது எவருக்குமே புரியவில்லை. ஆனால் அவன் ஒரு செல்வாக்குள்ள பெரிய மனிதன் என்று அனைவரும் நம்பினார்கள்.

நகரத்துக்கு வெகு தொலைவில் இருந்தான் தந்திரவாணன்.