பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


இளவரசன் சோர்வுற்று, தூக்கக் கலக்கத்தில் காணப்பட்டான்.

கரடி அவனைப் பார்த்து, “இளவரசனே இருவரும் விழித்திருக்க வேண்டியதில்லை, முதலில் நீ தூங்கு, நீ கீழே விழுந்து விடாமல் உன்னை நான் பிடித்துக் கொண்டு விழித்திருக்கிறேன். பிறகு, நான் தூங்குகிறேன், நான் விழுந்து விடாமல் நீ பிடித்துக் கொள்; பொழுது விடிந்ததும் சிங்கம் போய் விடும் நாமும் அவரவர் வழியில் போகலாம்” என்று கூறியது.

அது கூறிய யோசனைப்படி, இளவரசன் தூங்க முற்பட்டான்.

அப்போது சிங்கம் தன்னுடைய நயவஞ்சகத்தைக் காட்ட முனைந்தது.

“அன்புள்ள கரடியே! நாம் இருவரும் ஒரே இனம்! அவனோ நம் விரோதி; அவனை நீ காப்பாற்றலாமா? நான் போன பின், அவன் அம்பெய்து உன்னைக் கொன்று விடுவானே. மனித இனம் நன்றி பாராட்டாதது, எனவே அவனைக் கீழே தள்ளிவிடு, என் பசியைத் தீர்த்துக் கொண்டு போகிறேன், உனக்கும் பயம் அகன்று விடும், என்று தேனொழுகக் கூறியது சிங்கம்.

“ஏ சிங்க ராஜனே! நன்மையோ தீமையோ நான் அவனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அதனால், அவனுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று மறுத்து விட்டது கரடி.

தன் தந்திரம் பலிக்காமல் போகவே சிங்கம் அமைதியாகி விட்டது.

இளவரசன் கண்விழித்தான். சிங்கத்துக்கும் தனக்கும் நடந்த உரையாடலை அவனிடம் கூறிவிட்டு, கரடி கண்அயர்ந்தது.

கரடியிடம் தன் தந்திரம் பலிக்காமல், ஏமாந்து போன சிங்கம் இளவரசனிடம் முயன்றது.