பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 வெகு நேரம் வேட்டையாடிவிட்டு, திரும்பினான் அரசன். அப்போதும் அந்தணன் மிகத் தீவிரமாக யாகத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான் அரசன். அந்தணனை அணுகி, "இந்த வில்வப் பழங்களைக் கொண்டு நீ யாகம் செய்வதன் நோக்கம் என்ன?” என்று கேட்டான் அரசன். 'அக்கினி தேவன் எனக்குக் காட்சி அளித்து வரம் அளிப்பதுடன், யாககுண்டத்திலிருந்து ஒரு தங்க வில்வப் பழமும் கிடைக்கும். அதற்காகவே, காலையிலிருந்து யாகம் செய்து கொண்டிருக்கிறேன். காட்சியும் கிடைக்க வில்லை, காரணமும் தெரியவில்லை” என ஏக்கத்தோடு கூறினான் அந்தணன். "அப்படியானால் ஒரு வில்வப் பழத்தை என்னிடம் கொடு, உனக்காக நான் யாகத்தில் ஈடுபடுகிறேன்” என்றான் அரசன். அதற்கு அந்தணன், மிக அலட்சியமாக, மனத்துாய்மையும், பக்தியும் இருந்தால்தான், அக்கினி தேவனைக் காண இயலும். புனிதத்துடன் பக்தியுடன் காலையிலிருந்து தவம் இருக்கிறேன். எனக்கே காட்சி கிடைக்கவில்லை, உனக்கு மட்டும் எவ்வாறு கிடைத்து விடும்?" என்று கர்வத்துடன் கூறினான். “அந்தக் கவலை உனக்கு வேண்டாம், என்னிடம் ஒரு பழத்தைக் கொடு” என்று கேட்டுப் பெற்றுக் கொண்டான் அரசன். மனதை ஒரு நிலைப்படுத்தி, (வேறு எண்ணங்களில் சிதற விடாமல்) "அக்கினி தேவனே! இதோ இந்த வில்வப் பழத்தை உனக்கு அளிக்கிறேன்; உனக்குக் கருணை உண்டாகவில்லை என்றால், என் தலையை உனக்கு அளிக்கப்போகிறேன்” என்று கூறி தன் கையில் இருந்த வில்வப்பழத்தை யாக குண்டத்தில் போட்டான் அரசன்.