பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

முற்றிலும் திருப்தியுடன் மன மகிழ்ச்சியோடு வாழும் ஒரு மனிதனைக் கூட நாட்டில் காணவில்லை.

பணக்காரனாக இருந்தால், அவனுக்கு உடல் நலமில்லை, உடல் நலத்தோடு இருப்பவனுக்குப் போதிய செல்வம் இல்லை. உடல் நலமும், பணமும் இருந்தால் பிள்ளைகள் இல்லையே என்ற கவலை; செல்வமும் உடல் நலமும் இருந்தால், மனைவி சரி இல்லை. பொல்லாத மனைவியால், நாள் தோறும் சச்சரவு; நிம்மதி இல்லை. பிள்ளைகள் இருந்தால், தீயவர்களாக இருந்தனர். இப்படியாக, ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு மனக் கவலை இருந்து கொண்டு இருந்தது.

ஒரு நாள், இரவில் அரசனின் குமாரன் ஒரு குடிசையின் பக்கம் போய்க் கொண்டிருந்தான். அப்போது அந்தக் குடிசையிலிருந்து ஒரு குரல் கேட்டது.

அதாவது: “கடவுள் அருளால் இன்றைய வேலை முடிந்தது. வயிற்றுக்கும் போதுமான அளவு உணவு கிடைத்தது. இனி அமைதியாகப் படுத்து உறங்கலாம். இறைவன் கருணையே கருணை! எனக்கு வேறு என்ன வேண்டும்?”

இந்தக் குரலைக் கேட்டான் இளவரசன். அவனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. இளவரசன் காவலர்களை அழைத்து, அந்தக் குடிசைக்குள்ளே இருந்த மனிதனின் சட்டையைக் கொண்டு வந்து அரசனிடம் அளிக்கும்படி உத்தரவிட்டான். மேலும், அந்தக் குடிசைவாசி எவ்வளவு கேட்டாலும் அதைக் கொடுக்கும்படி சொன்னான். காவலர்கள் உடனே அந்த ஏழையின் குடிசைக்குள் சென்றனர்.

அங்கே கவலை இல்லாமல், கடவுளை வழிபாடு செய்து கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டனர். ஆனால், அவன் மிகவும் ஏழ்மையில் இருந்தான். அவனிடம் சட்டை எதுவும் இல்லை.