பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

மூடத்தனத்தால் ஏமாந்த வியாபாரி


கங்கைக் கரையில் சிறிய நகரம் ஒன்று இருந்தது. அங்கே காவி உடை அணிந்த ஒருவன் வசித்து வந்தான், அவன் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அதனால், அவனை மௌன சாமி என்று எல்லோரும் அழைத்தனர்.

தினமும் அந்த மௌனசாமி வீடுவீடாகச் சென்று, பிச்சை எடுத்து உண்பது வழக்கம்.

மௌனசாமி வழக்கம் போல் ஒரு நாள் பிச்சை எடுக்கச் சென்றான்.

அப்பொழுது, ஒரு வீட்டில் வியாபாரியின் மகள் பிச்சை போட வந்தாள். அவள் மிக அழகானவள். திருமணம் ஆகாதவள்.

அவளைக் கண்டதும் மயங்கிய மௌனசாமி. மெய்மறந்து, ‘கடவுளே!’ என்று பெருமூச்சு விட்டான்.

அந்த வார்த்தை காதில் விழுந்ததும், ஓடி வந்து பார்த்தான் வியாபாரி.

மௌனசாமியோ அப்பொழுது கண்களை மூடியபடியே அழகியை நினைத்து, கற்பனையில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருந்தான்.

வியாபாரி உடனே மௌனசாமியின் காலில் விழுந்து வணங்கி, “மௌனசாமியாகிய நீங்கள் வாய் திறந்து, ‘கடவுளே’! என்று சொன்னதில் ஏதோ ஒரு ரகசியம் உள்ளது. கருணை கூர்ந்து, தாங்கள் அதை விளக்கிக் கூறவேண்டும்” என்று பணிவோடு வேண்டினான்.