பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐயம் புகினும் செய்வன செய்

 

தெய்வம் வந்தே தடுத்தாலும்
தீமை வந்தே அடுத்தாலும்
செய்யத் தக்க செயலெல்லாம்
செய்ய வேண்டும் எப்போதும்.

வறுமை யுற்றுக் கிடந்தாலும்
வாடிப் பிச்சைக் கலைந்தாலும்
சிறுமை யற்ற நற்செயலே
செய்ய வேண்டும் எப்போதும்.

துன்பம் தனக்கு நேர்ந்தாலும்
துயரந் தன்னைச் சேர்ந்தாலும்
இன்பம் பிறர்க்குத் தருஞ்செயலே
இயற்ற வேண்டும் எப்போதும்.

60