பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அவ்வப்பொழுது காணவரும் தன் மாமன், மாமி இவர் தம் மனம்வருந்தும் என்று அஞ்சித் தன் வருத்தத்தை மறைத்து வந்தாள். அதனைக் குறிப்பாக உணர்ந்த கோவலனுடைய பெற்றோர் சொல்லொணாத் துயர் உற்று வருந்தினர்.

கற்புக்கரசி

தம் மருமகன் நாடகக் கணிகையின் சேர்க்கையில் ஈடுபட்டு இருந்ததைக் கண்ணகியின் பெற்றோர் அறிந்தனர்; அறிந்து என் செய்வது? அவர்கள் அடிக்கடி வந்து தம்செல்வ மகளைக் கண்டு போயினர். உத்தமபத்தினியாகிய கண்ணகி தன் பெற்றோரிடமும் தன் மனவருத்தத்தைக் காட்டாது மலர் முகத்துடன் நடந்துகொண்டாள். அப்பெரு மகளது சிறந்த ஒழுக்கத்தைக் கண்ட உற்றாரும் உறவினரும் அவளைக் கற்புக்கரசி’ என்று பாராட்டினர்.

இந்திரா விழா

இவ்வாறு கண்ணகி கணவனைப்பிரிந்து துயர் உறும் பொழுது, அவளது நினைப்பே கடுகளவும் இல்லாமல் கோவலன் மாதவியின் மாளிகையில் காலம் கழித்து வந்தான். இங்ங்ணம் வாழ்ந்து வருகையில், சித்திரை மாதத்தில் ஆண்டுதோறும் இந்திர விழாத் தொடக்கம் ஆயிற்று.

முசுகுந்தன் என்ற சோழ அரசன் கால முதல் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது. அவ்விழா இருபத் தெட்டு நாட்கள் நடைபெற்றது. அந்த நாட்களில்