பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

கண்ணகிக்குக் கூற அஞ்சினாள்; அதனால் குரவையாடி நின்ற மகளிரிடம் தான் கேட்ட செய்தியைக் கூறிக் கண்ணகியைப் பார்த்துக் கண்ணிர் விட்டு நின்றாள்.

கண்ணகியின் கவலை

அந்நிலையில், குரவைக் கூத்தினைக் கவனித்து நின்ற கண்ணகி, மாதரிமகளான ஐயை என்பாளை நோக்கி “தோழி, என் காதலன் இன்னும் வரவில்லையே? அதனால் என் நெஞ்சம் கலங்குகிறது; என் மூச்சுத் தீயுடன் கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் உள்ள என்னை நோக்கி இந்த ஆய்ச்சியர் ஏதோ பேசிக் கொள்கின்றனர். அவர்கள் பேச்சின் கருத்து யாதோ தெரியவில்லையே! கோவலன் சென்றபோதோ என் நெஞ்சம் கலங்கியது. அந்நேரமுதல் என் உள்ளம் கலங்கிக் கொண்டே இருக்கிறது. இவர்கள் பேசிக்கொள்வது முக்கியமான செய்தியாகும். இவர்கள் பேசுவதற்கு ஏற்ப என் காதலன் வரவில்லை. ஐயோ! நான் என்ன செய்வேன்” என்று வருந்திக் கைகளைப் பிசைந்து நின்றாள்.

முதுமகள் கூற்று

அந்த நிலையில், முன் சொன்ன ஆயர் முது மகள் வாயைத் திறந்து, “இவள் கணவன் அரசனது அரண்மனையில் இருந்த சிலம்பைத் திருடிய கள்வன் என்று கருதப்பட்டுக் கொலை செய்யப் பட்டான்” என்று கூறினாள்.

கண்ணகி புலம்பல்

அவ்வளவே: கண்ணகி பொங்கி எழுந்தாள்; தன்வசம் இழந்து, நிலத்தில் மயங்கி வீழ்ந்தாள்.

சி-4