பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

குட்டுவனுக்கும் இளங்கோ அடிகட்கும் உயிர் நண்பர் ஆவர். அவர் அடிக்கடி சேரநாட்டுக்கு வந்து போவது வழக்கம். அப்புலவர் சேரனைக் காண வஞ்சி மாநகரம் சென்றார்; அரசன் மலை வளம் காணப் போயிருப்பதை அறிந்தார். அரண்மனை ஆட்கள் வழி காட்ட வந்து சேரர் பெருமா னையும் அடிகளையும் கண்டு அடி பணிந்தார். உடன் பிறந்தார் இருவரும் அவரைத் தழுவி மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தங்கள் மன்னர் பெருமான் மலை நாடு நோக்கி வந்தான் என்பதை மலைவாணர் அறிந்து மகிழ்ந்தனர்; அகில், சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களையும் மலையில் விளையும் பலவகைப் பழங்களையும் எடுத்துக் கொண்டு தங்கள் அரசர் பெருந்தகையைச் சென்று கண்டனர். மன்னன் மகிழ்ந்து, “மலைவாணரே உங்கள் மலை நாட்டில் ஏதேனும் விசேஷம் உண்டோ?” என்று கேட்டான்.

கண்ணகி விண்ணகம் புகுந்த செய்தி

உடனே குன்றக் குறவர் அரசனைப் பணிந்து, “பெருமானே சில மாதங்கட்கு முன்பு எங்கள் மலையில் இருந்த வேங்கைமர நிழலில் இளமங்கை ஒருத்தி வந்து நின்றாள். அவள் கணவனைப் பறி கொடுத்தவள்; பொறுக்க முடியாத துன்பத்தை அநுபவித்தவள். அவள் கண்ணெதிரே ஒரு விமானம் வந்து நின்றது. அவள் அதனில் இருந்தவனைப் பார்த்து மகிழ்ந்தாள். அவன் அவள், கணவன் போலும்! அவள் அவ்விமானத்தில் ஏறிக் கொண்டாள். விமானம் மறைந்தது அவள் எந்த நாட்டவளோ? யார் மகளோ என்றனர்.