பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தெய்வமாக வணங்கப்பட்டவள், இப்பண்புகளால் அவளது வரலாறு மூன்று தமிழ் நாடுகட்கும்மூன்று தலை நகரங்கட்கும் தமிழ் அரசர் மூவர்க்கும் உரியதாயிற்று, மேலும், இந்நூலில் குறிஞ்சி (மலைநாடு), பாலை (பாலைவனம்), முல்லை (காட்டு நிலம்) முதலிய நில அமைப்புகளும் அங்கு வாழும் மக்கள் இயல்புகள் அவர் வழிபாட்டு முறைகளும் தெளிவாகப் பேசப்பட்டுள்ளன. இன்று காணக் கூடாத நிலையில் அழிந்து பட்ட பூம்புகார் நகரம், வஞ்சி மாநகரம் முதலிய நகரங்களின் அமைப்பையெல்லாம் இந்நூலிற்காணலாம். இந்நூலில், இயற்றமிழ் - இசைத் தமிழ் - நாடகத் தமிழ் என்னும் மூவகைத் தமிழையும் கண்டு மகிழலாம். பண்டைக்கால நடன வகைகள் இந்நூலைக் கொண்டுதான் அறிய முடிகின்றன. சுருங்கக் கூறின், இந்நூலைக் கொண்டு கி.பி 2-ஆம் நூற்றாண்டின் தமிழகத்தை ஒருவாறு அறியலாம். வேறு எந்தத் தமிழ் நூலைக் கொண்டும் இந்த அளவு அறிதல் இயலாது

இந்நூல் நடை மிகவும் எளிமை வாய்ந்தது. படிக்க இனிமை பயப்பது. இளங்கோ அடிகள்: கண்ணகி வரலாற்றைப் படிப்பவர்க்கு இன்பம் பயக்கத்தக்க முறையில் பாடியுள்ளனர். இந்தச் சிறப்பை நோக்கியே காலஞ்சென்ற சுப்பிரமணிய காரதியார் இதனை,

"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்”, என்று வாயார வாழ்த்தினார்.