பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்குரை காதையில்

96


பிதா மகர் விட்டுமனிடம் கேட்டாள். வாதிட்டாள் நீதி கிடைக்கவில்லை. கண்ணன் கருணையால் கட்டுண்டாள். பொருந்திருந்தாள். காலத்திற்காகக் காத்திருந்தாள். கடைசியில் தர்மம் வென்றது. பாஞ்சாலியின் சபதம் போர்க்களத்தில் வெற்றி பெற்றது.

பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி முன்வைத்த வாதமும் வழக்குரையும் தனிச்சிறப்பு மிக்கதாகும். பாரதப் பெண்மைக்கு எடுத்துக்காட்டாகும்.

இளங்கோவடிகள் கண்ணகி, மதுரையில் நடந்த அநியாயத்தை மதுரை மக்களிடத்தில் எடுத்துரைத்தாள். பெண்டிரிடமும், சான்றோரிடமும், தெய்வத்திடமும் எடுத்துரைத்தாள். அதன் பின்னர் நேராக அரசவைக்கு முன் அவளே சென்று தன் கணவன் கள்வனல்லன் என்று ஆதாரம் காட்டி வாதிட்டு வழக்குரைத்து வெற்றி கண்டாள். உண்மைய அறிந்த மன்னன்:

“தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன் சொற்கேட்ட
யானோ அரசன், யானே கள்வன்,
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என் முதல் பிழைத்தது கெடுக வென் ஆயுளென

மன்னவன் மயங்கி விழ்ந்தனனே தென்னவன்”

அத்துடன்

“கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்கு காட்டுவதில் லென்று

இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி”

என

தென்னவனும் அவன் துணைவி கோப்பெருந்தேவியும் அரியணையிலிருந்து விழுந்து உயிர்விட்டனர்” என்பதை சிலப்பதிகாரக் காப்பியச் செய்தி சிறப்பித்துக் கூறுகிறது.