பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரைக் காதையில்

110



இங்கு அந்தணர்களுக்குரிய ஒரு குறிக்கோள். இரு பிறப்பு, முத்தீ, நான்மறை, ஐம்பெருவேள்வி, அறுதொழில் ஆகியவை பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.

குறிக்கோள் ஒன்று என்பது ஒன்று புரிகொள்கை அதாவது வீடு பேற்றினை அடைவது, இரு பிறப்பு என்பது உபநயனத்திற்கு முன் ஒரு பிறவி அதற்குப் பின் இரண்டாவது பிறவி என்று அந்தணர்களை இருபிறப்பாளர்கள் என்று குறிப்பிடுவார்கள். முத்தீ என்பது வேள்விக்குரிய ஆகவனீயம், காருக பத்தியம், தக்கினாக்கினி ஆகியவை, நான்மறை என்பது ரிக், யஜீர், சாமம், அதர்வனம் என்பது, ஐம்பெரும் வேள்வி யென்பது கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூதவேள்வி, மாநிட வேள்வி, தென் புலத்தார் வேள்வி ஆகியவை என்றும், அறுதொழில் என்பது ஓதல் ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் ஆகியவை என்று உரையாசிரியர்கள் விளக்குவர்.

இவையனைத்தும், வைதீக இந்து சமய நெறிகளுக்குரியன என்பதை அறிவோம்.

முத்தீ, நால்வேதம், ஐவேள்வி, ஆறங்கம் ஆகியவை பற்றி பல இடங்களிலும், ஆழ்வார்கள், தங்கள் பாசுரங்களில் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

“சிறையார் உவணப்புள் ஒன்றேறியன்று
    திசைநான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடுவேல் அரக்கர் மடியக்
    கடல்சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர், நால்வேதர்
    ஐவேள்வி, யாறங்கர், எழினிசை யோர்
மறையோர் வணங்கப்புகழெய்தும் நாங்கூர்

    மணிமாடக் கோயில் - வனங்கென்மனனே!”

என்றும் இன்னும் பல பாடல்களிலும் பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம்.