பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் உரை

வணக்கத்திற்குரிய தவத்திரு திரு. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் மணிவிழாவையொட்டி ஒரு கட்டுரைப்போட்டி (1994-95)ல் மாநில அளவில் நடைபெற்றது. அப்போட்டியில் தமிழ்புலவர்கள், தமிழாசிரியர்கள், கல்லூரிப்பேராசிரிரியர்கள், தமிழ்ப் புலமையுடைய பொதுமக்கள், எழுத்தாளர்கள் முதலியோர் பலரும் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்தபடி பலரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்காக அறிவிக்கப்பட்ட கட்டுரைத்தலைப்புக்கள்:

1. சங்க இலக்கியங்களில் சமய வளர்ச்சிக்கான வழிபாட்டு முறைகளைப் பற்றியும் சமுதாய வளர்ச்சிக்கான வழிமுறைகளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதுதல்.

2. ஐம்பெருங்காப்பியங்களில் சொல்லப்பட்டுள்ள இந்து சமயக்கருத்துக்களையும் மனித வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளையும் தொகுத்து எழுதுதல் என்பதாகும்.

இவைகளில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பொதுத்தலைப்பில் சிலப்பதிகாரத்தில் காணும் இந்து சமயக்கருத்துக்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையான நெறி முறைகளும் என்னும் தலைப்பில் எழுதி அனுப்பப்பட்ட நீண்ட கட்டுரையே இந்நூலாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள போட்டிகள் (1994-95) பற்றி அறிவிக்கப்பட்ட முடிவுகளில் இக்கட்டுரைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.

ஐம்பெருங்காப்பியங்கள் என்று கூறப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி ஆகியவை சமண, பெளத்தம் சார்ந்த அறிஞர்களால் இயற்றப்பட்டவை. அந்நூல்கள் பெரும்பாலும் சமண, பெளத்த சமயக்கருத்துக்கள் நிகழ்ச்சிகள் நிறைந்தனவாக உள்ளன. வணிகப் பெருமக்களைப் பெரும் பாத்திரப்படைப்புகளாகக் கொண்டிருக்கின்றன.