பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பரிபூரண அவதாரமான கண்ணன் பெருமைகளையும், எட்டெழுத்து மகிமைகளையும்பற்றியெல்லாம் காதாரச் கேட்டு மகிழ்கிறோம்.

ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தப் பாடல்கள் தனிச் சிறப்பான முறையில் தனித் தமிழில் பாடப்பட்டுள்ளவை களாகும். ஆழ்வார்களின் பாடல்களின் தனித் தமிழ்ச் சுவைக்கு ஈடு இணையே இல்லை. தனித் தமிழ்ப் பாடல்களுக்கும் தனித் தமிழில் உயர்ந்த பக்தி தத்துவக் கருத்துகளுக்கும் வித்திட்டவர்களே ஆழ்வார்கள்தாம் என்று உறுதியாகக் கூறலாம்.

ஆழ்வார்கள் திருமாலின் தனிப் பெருமைகளைப்பற்றி மட்டுமே பாடுகிறார்கள். 'நாராயணா' வென்னும் நாமத்தைத் தவிர வேறு நாமத்தைப் பற்றி அவர்கள் சிறப்பித்துக் கூறவில்லை; கூற விரும்பவில்லை. திருமாலை வழிபடுபவர்களை மட்டுமே அவர்கள் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பியுள்ளார்கள். இதர வழிபாடுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதர சமயங்களைக் குறிப்பாக, அக்காலத்தில் தமிழகத்தில் பரவியிருந்த சமணத்தையும், புத்தத்தையும் அச்சமயத்தார் களின் தனித் துறவுத் தத்துவங்களையும் மறுத்தே, அவைகளை விலக்கியே பாடியுள்ளார்கள்.

ஆழ்வார்கள் வாழ்க்கையின்பத்தை நிராகரிக்கவில்லை. ஆனால், அதே சமயத்தில் எத்தகைய துன்பங்களைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. தங்களை மறந்து அவர்கள் திருமால் பக்தியில் ஒன்றி இணைந்துவிட்டார்கள். பிரபத்தியில் ஆண்டவனுடன் இரண்டறக் கலந்து விட்டார்கள். இவ்வுலகத்தில் உள்ள அத்தனை வாழ்க்கை இன்பங்களையும் அனுபவிக்கவும் காணவும் விரும்பினார்கள்; பெருமாள் சேவையே பெரும் சேவையாகக் கருதினார்கள்.

மனிதன் எந்தத் தொழில் செய்தாலும், வாழ்க்கையில் - குறிப்பாக - இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே திருமால் சேவையில் ஈடுபடலாம் என்னும் கருத்துகளை ஆழ்வார்கள் கடைப்பிடித்திருப்பதைத் திவ்யப்பிரபந்தப் பாடல்களில் நாம் காணலாம்.