பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 237

இயற்கை மற்றும் சமுதாயச் செல்வத்தை அவைகளின் உற்பத்தியை, உற்பத்தி முறையை நிழல்போல் நின்று, குடை பிடித்துப் பாதுகாப்பதும் அதை நடத்திச் செல்வதும் அரசின் கடமையாகும். அக்கடமையைச் சீராக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பாண்டிய மன்னர்களின் கோலின் செம்மை, குடையின் தண்மை, வேலின் கொற்றம் ஆகியவை சிறப்புமிக்கனவாகும் என்று, கோவலன் கவுந்தி அடிகளிடம் கூறுகிறான்.

மதுரை நகரில் வாழும் மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகளும் செல்வமும் தொழிலும், செழுமையும் இருப்பதால் அவர்கள் வாழ வழி தேடி வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லவேண்டிய அவசியமில்லை என்று காப்பியம் குறிப்பிடுகிறது. (இதே கருத்து புகார் நகரைப் பற்றியும் "பதியெழு வறியாப் பழங்குடி மக்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. இங்குக் கதையின் கருவாக இலைமறைவு காயாக ஒர் எதிர்மறை உண்மை பொதிந்திருப்பதை அறியலாம். செழுமைமிக்க புகார் நகரில் வாழ முடியாமல் கோவலன் அந்நகரைவிட்டு வெளியேறிவிட்டான். அதற்குக் காரணம் புகாரின் வறுமையன்று. இது ஒர் இலக்கியப் புதிர். அதே போலச் செல்வச் செழிப்புமிக்க மதுரைக்கு வந்த கோவலன் கொல்லப்படுகிறான். அவன் கொல்லப்படு வதற்குக் காரனம் மதுரையின் ஆட்சியன்று. வஞ்சிப்பத்தனின் வஞ்சகம் காரணமாகக் கோவலன் கொல்லப்படுகிறான். மதுரை நிகழ்ச்சியும் ஒர் இலக்கிய முடிச்சாகும். மேலும் இங்கு காரணமும் விளைவும் தொடர்பான தத்துவ ஞானக் கருத்துக்கு ஒர் உதாரணமாகவும் இந்நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன). -- அத்தகைய செல்வச் செழிப்புமிக்க மதுரை நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கோவலன், அறவழியில் தங்கள் கருத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் அறவோரும் துறவோரும் நிறைந்த புறஞ்சேரிக்கு வந்து, தீதுதிர் மதுரை மற்றும் தென்னவன் கொற்றம்பற்றிக் கோவலன் தவத்தில் மிக்க கவுந்தியடிகளிடம் கூறுகிறான்.