பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி நலன்கள் 229

"குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மோடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத' என்பர்.

குழல் - மூங்கில் குழல்; குழல் - நீர் குழைவு, முல்லைப் பண்ணைக் கோவலர் பாட என்பது ஒரு பொருள். முல்லை முகையில் வாய் வைத்து ஊதுவது வண்டின் தொழில்.

ஊது குழலில் முல்லைப்பண்ணைக் கோவலர் வாய் வைத்து ஊதுகின்றனர்; குழைந்து வளரும் முல்லை முகையில் வண்டுகள் தேன் உண்ண வாய்வைத்து ஊதுகின்றன. இரு பொருள்பட இத்தொடர்கள் அமைந்திருத்தல் காண்க. இதனைச் சிலேடை அணி என்பர்.

நிரல் நிறை உவமை அணி

ஒன்றுக்க மேற்பட்ட செய்திகளை உவமமாக வைத்து அவ்வாறு 'அவற்றிற்கு இணையாகப் பொருளை வைத்துக் கூறுதல் நிரல் நிறை அணி என்பர்.

இளவேனில் பருவத்தோடும், இளி என்னும் இசையைப் பாடும் வாயை உடைய வண்டினொடும் தென்றல் வீசுகிறது; இதற்கு உவமை பாணரோடும் நகரப் பரத்தரோடும் திரிதிரு கோவலன் கூறப்படுகிறான்.

'குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு

திரிதரு மரபின் கோவலன் போல இளிவாய் வண்டினொடு இன் இள வேனிலொடு மலய மாருதம் திரிதரு மறுகு'

என்பார் கவிஞர்.

தற்குறிப்பேற்ற அணி

இயற்கை வேறு; மனிதன் வேறு; உணர்வு அற்றது இயற்கை உணர்வு படைத்தவன் மனிதன். இன்ப துன்பங்கள் மனிதனை வாட்டும்; மலரச் செய்யும். இவை அஃறிணைப் பொருள்களுக்கு இல்லை.

கவிஞன் கற்பனை மிக்கவன். சுற்றியிருக்கும் சூழல் இவனுக்காக இரங்குவதுபோலக் கூறுவது கவிமரபு. இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.