பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சிலப்பதிகாரம்

பேசும் பேச்சுரைகள் சமயச் சார்பு கொண்டவை. சமண சமயக் கோட்பாடுகள் இந்நூலில் தலைமை பெறுகின்றன.

எனினும் மக்கள் கொள்ளும் சமய நம்பிக்கைகளுக்கு மதிப்புத் தருவதைக் காண முடிகிறது. வேட்டுவ வரியில் அவர்கள் கொற்றவையை வழிபடுகின்றனர். ஆயர் சேரியில் குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். கண்ணனைப் பற்றிப் பரவிப் பாடுகின்றனர். அங்குக் கண்ணனுக்கு மதிப்புத் தருகின்றனர்.

குன்றக் குறவர்கள் வேலனைப் புகழ்கின்றனர். தெய்வக் கதைகளை மாதவி ஆடலில் இடம் பெற வைக்கின்றார்.

மாங்காட்டு மறையோன் திருமால் தலங்கள் ஆகிய வேங்கடத்தையும் திருவரங்கத்தையும் காணச் செல்கிறான். ' உன் தெய்வங்களை வழிபட நீ போ, நாங்கள் எம் வழிப் படர்வோம்' என்று கவுந்தி அடிகள் கூறுகின்றார்.

இதுவே இளங்கோவடிகள் சமய நோக்கு எனத் தெரிகிறது. எந்தச் சமயமும் அவரவர் விருப்பப்படி மேற் கொள்ளும் உரிமையை மதிக்கிறார். தம் கொள்கையையும் வற்புறுத்திக் கூறுகிறார்.

செங்குட்டுவன் திருமாலையும், சிவனையும் வழி படுவதைக் கூறுகின்றார். மாசாத்துவான் புத்த மதத்தைச் சார்கிறான்; மாதவி பெளத்த மதத் துறவியாகிறாள். சமயப் பொது நோக்கு உடையவர் என்பதைக் காட்டிக் கொள்கிறார்; எனினும் காவியத்தின் நோக்கம் வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கருத்தை நூல் முழுதும் அமைப்பது. இது அவர் கோட்பாடு; ஆசிரியர் இதில் தம்மை வெளிப்படுத்திக்

கொள்கிறார் என்று கூறலாம்.

இறுதியில் சமய எல்லைகளைக் கடந்து மாந்தர் போற்றத் தக்க அறங்களைத் தொகுத்துக் கூறுவதைக் காண்கிறோம். சமய எல்லையைக் கடந்து பொது அறங்களைக் கூறக் காண்கிறோம். இவ்வகையில் இவர் வள்ளுவரைப் பின்பற்றிக் கூறுவதைக் காண முடிகிறது.