பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கானல் வரி

இவற்றில் புகார் நகரத்து நெய்தல் நிலத்து மக்கள் வாழ்வுச் சிறப்புக் கூறப்படுகின்றது; மற்றும் இவை அகப் பொருள் துறையமைந்தவை ஆகின்றன.

காவிரி நோக்கிப்பாடுதல்

"திங்கள் குடை உடைய சோழன் செங்கோல் ஆட்சி கங்கைவரை பரவியுள்ளது; அவன் கங்கையை அடைந்து அவளோடு உறவு கொண்டாலும் நீ வெறுப்பதில்லை; அது பெண்களின் கற்புக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்” என்று பாடுகிறான். இதே கருத்தில் அடுத்து 'அவன் குமரியை அடைந்தாலும் காவிரி பிணக்குக் கொள்வது இல்லை' என்று குமரியாற்றைக் குறிப்பிட்டுப் பாடுகின்றான்.

'சோழ நாட்டில் உழவர்கள் ஒசை இருபுறமும் ஒலிக்கக் காவிரி பெருமிதமாக நடக்கிறாள். அதற்குக் காரணம் சோழ நாட்டின் வளம்தான்” என்று கூறுகிறான்.

மகளிர் ஆண்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது அவர்கள் கடமை என்ற கருத்தும் இவற்றில் அமைந்து விடுகிறது.

மாதவி பாடியது

இவற்றிற்கு நிகராக மாதவி பாடும் பாடல்கள் அவற்றை மறுத்துக் கூறுவனபோல் அமைகின்றன.

காவிரியின் பெருமித நடைக்குச் சோழன் செங் கோன்மைதான் காரணம்' என்கிறது அவள் பாடல்.

அடுத்து, 'அவன் வெற்றிச் சிறப்பே அதன் பெருமைக்குக் காரணம்' என்கிறாள்.

'காவிரி நீர் உழவர்க்கு உதவுகிறது. அது தாயாக இருந்து பால் ஊட்டுவது போல மக்களுக்கு நல்வாழ்வு தருகிறது. இதற்குக் காரணம் சோழன் மக்கள்பால் கொண்டுள்ள நேயமும், அவன் காட்டும் அருளும்தான்' என்று கூறுகின்றாள்.

இங்கே முரண்பட்ட கருத்துகள் அமைந்து விடுகின்றன; பெண்கள் பெருமைக்கு ஆண்களின் செயல்களே துணை செய்வன என்பது அவள் வற்புறுத்தும் கருத்தாக அமைகிறது.