பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 ஊர் காண் காதை

வரிசையில் வந்து குழுமினர். இவர்களை மகிழ்விக்கும் மகளிர் வாழும் வீதி அதனைக் கண்டான்; அவனுக்கு இது புதுமையைத் தந்தது. அந்த நகர் களிப்புத்தருவது என்பதை அந்த ஊர் அவனுக்கு உணர்த்தியது.

கலைச் செல்வியர்

கலைகள் கற்றுப் பிறரைத் தம் கண்வலையில் ஈர்க்கும் கலைச் செல்வியர் வாழ்ந்த பகுதி உயர்வு பெற்றிருந்தது. சுடுமண் ஆகிய ஒடுகளால் வேயப்படுவதற்கு மாறாகப் பொன் தகடுகளால் வேயப்பட்ட காவல் மிக்க வீடுகள் அவை. முடி அரசர்கள் அங்கு வந்து ஒடுங்கிக் கிடப்பர். உள்ளே இருப்பது கள்ள வாழ்க்கை; அதனை மறைத்துத் தரும் காவல் மிக்க வீடு; தலைக்கோல் பட்டம் பெற்ற அரங்கக் கூத்தியரும், வாரம்பாடும் தோரிய மகளிரும், தலைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும், இடைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும் என நால்வகைப் பட்ட மாதர் அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் அரசனால் ஆயிரத்து எண் கழஞ்சு பரிசு பெற்றுப் பாராட்டுப் பெற்றவர்கள். நகரத்து மேல்நிலைக் கலைச் செல்வியர்கள் அவர்கள்; அறுபத்து நான்கு கலைகளையும் கற்ற காரிகையர் ஆவர்.

கலை வாழ்க்கை வாழும் கணிகையராக அவர்கள் திகழ்ந்தனர்; விலைவாழ்க்கையையும் அவர்கள் ஏற்று நடத்தினர். அவர்கள் கண்வலையில் பட்டு அறிவு மயங்கி நறவு மகிழ்பவர் போல அங்கே வந்து செறிவர்.

தவசிகள் அவசியத்துக்காக இங்கு வந்து தெய்வதரிசனம் கண்டு செல்வர்; முகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் நகைப்பதம் பார்க்கும் இளைஞர்கள் இங்கு வந்து பதநிச பாடுவர் காம விருந்து அறியாத கற்றுக் குட்டிகள் இங்கு வந்து முட்டிப்பார்ப்பர்; பால பாடத்தை இங்கே வந்து படித்துச் சென்றனர்.

இந்த இச்சைக்காரர்கள் எல்லாம் இங்கு வந்து நாளும் நச்சித் தங்கி இன்துயில் பெற்றனர். பண்ணைப்பழித்த இன்சொல் பாவையர் எண்ணெண்கலையோர் இருந்த இரண்டு பெரிய வீதிகளையும் அவன் கண்டான். -