பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 ஊர் சூழ்வரி

இழக்கும் அவலநிலைக்கு ஆளாயினாள். காலையில் அவன் அவளைத் தழுவினான்; மாலையில் அவன் குருதிபடிந்த மார்பைத் தழுவினாள். மாலை இருந்த மார்பு அது; இரத்தம் படிந்து மாலையாகக் காட்சி அளித்தது. தன்னை அவன் காணாத நிலை; அது அவளுக்குக் கடுந்துயரத்தைத் தந்தது.

'மன்னவன் தவறு இழைத்தான் பொன்னுறு நறுமேனி துகள் படிந்து மண்ணில் கிடக்கிறது; என் துயரத்தை யார் களைவது? இதற்குக் காரணம் யாது? விதி என்று கூறக்கூட ஆள் இல்லை. ஆறுதல் கூறக் கூட ஆள் இல்லாமல் இந்தத் தனிமையில் உழல்கின்றேன்!”

'இந்த அநீதியை எடுத்துக் கூற வேண்டிய அறம் அழிந்து விட்டதா? மக்கள் மயங்கி விட்டனரா? கொழுநர் குறை தாங்கும் பெண்கள் என் அழுகையைக் கேட்டு ஆறுதல் தரமாட்டாரா? திக்கற்றவரை அடுத்து ஆதரிக்கும் காப்புமிக்க சான்றோர் இதைச் செவியில் கேட்டுச் செம்மையுறச் செயல்பட மாட்டார்களா? ஈன்ற குழவியின் அழுகுரல் கேட்டால் எடுத்து வளர்க்கும் சால்பு உடையவர்கள் இன்று அலறும் குரல் கேட்டு அமைதியுற்றது ஏன்? தெய்வங்கள் கோயில்களில் நிறுவி இருக்கிறார்கள். அவர்கள் கல்லாகி விட்டார்களா? என் சொல் கேட்டு நீதி வழங்காமல் இருப்பது ஏன்? தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே! ஏன் எந்தச் சொல்லும் சொல்லாமல் மவுனம் சாதிக்கின்றது? அநீதியைக் கேட்க இந்த நகரில் ஆள் இல்லாமல் போனது ஏன்?' என்று அலறித் துடித்து அழுது முறையிட்டாள்.

மண்மீது கிடந்த மணாளன் அவன் பொன்துஞ்சம் மார்புமீது விழுந்து புரண்டு அழுதாள்; அவனைத் தழுவிக் கொண்டாள். அவன் உயிர் பெற்று எழுந்தான். 'கன்றியது உன் முகம்' என்று கனிவுடன் பேசினான். அவள் கண்ணிரைத் தன் கையால் துடைத்தான்.

அவள் தன் கணவன் திருவடிகள் இரண்டையும் தன் கையால் பற்றிக் கொண்டு வணங்கினாள். அவன் உயிர் உடலைவிட்டு நீங்கியது; உயிர் வடிவில் வான் நோக்கி எழுந்தான்; வானவர் எதிர்கொண்டு அழைத்தனர். 'நீ இருக்க' என்று அவளுக்கு இறுதிச் செய்தியாகச் சொல்லி அவன் மறைந்து நீங்கினான்.