பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv பெருந்துறைக்கு அருகில் முத்துக்களும், சங்குகளும் மிக அதிகமாகக் கிடைத்து, அவைகள் உலகில் எல்லாப் பகுதியினராலும் பாராட்டப்பெற்றன. கொற்கை முத்துக்கு ஈடு இணை இல்லை யென்பதை, "மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து' ...என்ற அகப்பாட்டு அழகுற விளக்குகிறது. 35 முத்தும், நுண்ணிய பருத்தி ஆடைகளும், எலி மயிராலும், பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளும், ரோமாபுரி போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து குதிரை களும், மது வகைகளும், கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப் பெருந்துறையில் வந்து இறங்கிய வண்ணமிருந்தன. அழகான கப்பல்களில் தங்கத்தை ஏற்றிக்கொண்டு யவனர்கள் வருவார்களாம். பிறகு மிளகை ஏற்றிக்கொண்டு திரும்புவார்களாம். முசிறித்துறை முழுவதும் அந்தக் கப்பல்களின் பேரொலி கேட்கும் என்று சங்க இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. புகார் துறைமுகத்தில் எல்லா நாடுகளைச் சேர்ந்த வணிகர்களும் மாலுமிகளும் வந்திறங்குவார்கள்; அவர்கள் எல்லோரும் ஒரே இனத்தவர்போல ஒற்றுமையாகப் பழகி வாழ்வார்கள் - என்று தமிழிலக்கியம் கூறுகிறது. யவனர்கள் பலர் தமிழ் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்ற செய்தி யொன்றே இருசாரா ரிடையிருந்த நல்லெண்ணத்தை விளக்கும் கண்ணாடியாகும். இத்துணை வரலாற்றுச் சிறப்பு -வாணிபச் சிறப்பு ஆகியவற்றைப் பின்னணி யாகக் கொண்டு - எதிர் காலத்துக்குப் பயன்படும் வகையில் இழையோடும் ஒரு கதையினூடே பழந்தமிழகத்துப் பழக்க வழக்கம் பண்பாடு அரசியல் முறை கலைத் திறன் அனைத்தையும் விளக்கிய பெருமை இளங்கோவடிகளைச் சேரும். சிலப்பதிகாரக் கதை, தமிழ் நாட்டில் எத்தனையோ புதிய கதைகளுக்கு அடிப்படையாக அமைந்து தவியிருக்கிறது. அதன் இலக்கிய நயம் - கலை அம்சம் - வரலாற்றுச் செழுமை - பாத்திரங்களின் மாண்பு - இவைகளையெல்லாம் முற்றிலும் புறக்கணித்து விட்டுத் தமிழகத்து நாடக மேடைகளில் - திரையரங்குகளில் முரண்பட்ட வகையில் சிலப்பதிகாரக் கதையை உருவாக்கி நடித்து வந்தனர். கண்ணகி - கர்ணகி ஆனாள். மா தவி மாதகியானாள்; ஏன் பாதகியும் ஆனாள். கோவலன்; கோவிலன் ஆனான்- மாசாத்துவான் -மாச்சோட்டான் செட்டியென்றும் - மாநாய்கன் மாணாக்கன் செட்டியென்றும் மாற்றப்பட்டனர். அது கண்டு சிலப்பதிகாரம் உணர்ந்தோர் புழுங்கித் துடித்தனர். மூலக் கதையின் ஆசிரியர் கொண்ட கருத்துக்கு மேலும் வலுவூட்டுவது போன்ற மாற்றங்களும் - அவரால் படைக்கப்பட்ட பாத்திரங்களின் பண்பு கெடாமல் தரப்படுகிற உருவகமும் - மறுக்கத்தக்கன அல்ல. காலத்திற்கேற்ற சில மாற்றங்களைக் கதையின் நோக்கம் கெடாதவாறு அமைப்பதும் தவறல்ல. மூலக் கதை ஆசிரியர் விட்ட கருத்துக்களையோ, காட்டத் தவறிய காரணங்களையோ, அடிப்படைக்குக் குந்தகமின்றிப் புகுத்திடுவதும் குற்றமல்ல.