பக்கம்:சிலம்பின் கதை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சிலம்பின் கதை



கன்றை நினைத்துக் கொண்டு விடுதிரும்பும் பசுக்கள் உடன் சென்றன. அவற்றைச் செலுத்தும் இடையர் ஆட்டுக் குட்டியைத் தோளில் சுமந்தவராய் உடன் சென்றனர். அவர்கள் கையில் கோடரி வைத்திருந்தனர்; ஆய்ச்சியரும் ஒரு சிலர் அவருடன் சென்றனர்; பொறிகள் பல வைத்துக் காவல் செய்த மதிலின் வாயிலுள் சென்று அக நகரில் மாதரி கண்ணகி கோவலனோடு தம் மனையை அடைந்தாள்.


16. கோவலன் கொலை யுண்ணல்
(கொலைக் களக் காதை)

மனை வகுத்துத் தருதல்

கண்ணகியை அடைக்கலம் பெற்ற இடைக்குல மடந்தை ஆய்ச்சியர் மனையில் அவளை வைக்காமல் தனி வீடு அமைத்து அவளுக்குத் துணையாக ஆய்ச்சியர் சிலரை உடன் அனுப்பி வைத்தாள். அவர்களைக் கொண்டு அவளை நீராட்டினாள். மதுரை உயர் குலத்து மகளிரைப் போல் அவளுக்குப் பொன் நகைகள் பூட்டிப் பொலிவு பெறச் செய்தாள். அதன்பின் அவளுக்குத் தன் மகள் ஐயையை அறிமுகம் செய்தாள். “இவள் இட்ட வேலையைச் செய்து தருவாள்; அடித்தொழில் ஆட்டியாக உன்னுடன் இருப்பாள்” என்று கூறினாள்.

“மற்றும் உன்னைப் பொன்னைப் போலப் பாதுகாப்பேன்; கவுந்தி அடிகள் பாதுகாப்பான இடத்தில் உன்னைச் சேர்த்து இருக்கிறார். இனி உன் கணவனுக்கு எந்தக் குறையும் இருக்காது” என்று சாற்றினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/103&oldid=936417" இலிருந்து மீள்விக்கப்பட்டது