பக்கம்:சிலம்பின் கதை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சிலம்பின் கதை



வாழ்க்கையை விட்டு எப்படி அவளால் வர முடிந்தது? நினைத்திருந்தால் அவள் இந்த வசதிகளோடு வீட்டிலேயே தங்கிவிட்டு இருக்கலாம். அவளுக்குத் துணையாக இருந்தவை யாவை?

நாணமும், மடனும், நல்லோர் பாராட்டும் கற்புத் திறனும் இவைதாம் துணையாயின என்பதை உணர்கிறான். புறச்சுற்றம் அவளை அணைக்க வில்லை. அகச்சுற்றம் அவள் மனக் கோட்பாடு. அது அவளுக்குத் துணை செய்தது. உள்ளப்பாங்கு அவளை இயக்கியது என்பதை உணர்ந்து பேசினான்.

கோவலன் பாராட்டுரை

“மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று பாராட்டிய அவன் இப்பொழுது அவள் குணநலன்களை வியந்தான். “பொன்னே! கொடியே! புனை பூங்கோதாய்! நாணின் பாவாய்! நீள்நில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின்செல்வி” என்று கூறிப் பாராட்டினான். அவளை நன்கு உணர்ந்த நிலைமையில் பெண்மைக்குரிய நல்லியல்புகளை அறிந்தவனாய் அவளை உருக்கமாக விளித்தான்; அவள் காலடிகளைக் காண்கின்றான். சீறடிகளை அழகுபடுத்திய சிலம்பு அதைக்கேட்டுப் பெற்றான். “சீறடிச்சிலம்பில் ஒன்று கொண்டு செல்கிறேன்; அதை விற்று முதல் பொருள் ஆக்குவேன். அதனை மாற்றி வருகிறேன்; கலங்காது இருப்பாயாக” என்று கூறினான். அதனைப் பெற்றுக் கொண்டு காதலியாகிய அவளை உளமாரத் தழுவிக் கொண்டு விடைபெற்றான். பக்கத்தில் தக்க உறவினர் இல்லாமல் விட்டுச் செல்வதை நினைத்துப் பார்க்கிறான் அவன். அவள் தனி மகள்; மனம் வெதும்பினான்; கண்களில் நீர் வெளிப்பட அதை மறைத்துக் கொண்டு அவளை விட்டு நீங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/107&oldid=936421" இலிருந்து மீள்விக்கப்பட்டது