பக்கம்:சிலம்பின் கதை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

சிலம்பின் கதை



“தொண்டகப் பறையைத் தொடுங்கள்; சிறுபறை அறையுங்கள்; கொம்புகளை முழக்குங்கள்: மணி ஒலி ஒலிக்கச் செய்யுங்கள்; குறிஞ்சிப்பண் பாடுங்கள்; நறும் புகை காட்டுங்கள்; பூ இட்டு வழிபாடு செய்யுங்கள்; அவள் புகழைப் பாடுங்கள்; பரவுதலைச் செய்யுங்கள்; பல்வகை மலர்களைத் தூவுங்கள் ஒரு முலை இழந்த நங்கை இவள் நம் பெருமலை தொடர்ந்து வளம் சுரக்க அருள் செய்வாள்” என்று கூறினர்.

அனைவரையும் ஒன்று திரட்டி, “மலை அருவி ஆடுவோம். வாருங்கள். இது இங்கு வந்த புதுப்புனல் ஆகும்; இது பொன் துகளை வாரிக் கொண்டு வருகிறது: இது நம் தலைவன் மலையாகும்: அவனோடு நாம் புலவி கொள்வதற்குக் காரணமே இல்லை. எனினும் நம்மைத் தவிர்த்து மற்றவர்கள் இதில் வந்து நீராடினால் நம் நெஞ்சு நோகும், வேதனைப்படும்; அதைப் பொறுக்க மாட்டோம்” என்றனர்.

தெய்வத் திருப்பாடல்

நீராடி முடித்த பின் தோழியர் தம் தலைவியை நோக்கி “நீராடினோம் நாம்; இனி நாம் செய்யத் தக்கது யாது?” என்று வினவினர்.

“கடலில் சூரபதுமனைக் கொன்ற வேலவன் ஆகிய முருகனைப் பாடுவோம்; அவனை வைத்துக் குரவைக் கூத்து ஆடி அவனைச் சிறப்பித்துப் பாடுவோம்” என்றனர். முருகனைச் சிறப்பித்துப் பாடினர்.

“ஆறுமுகத்தினன், பன்னிரு கையினன் முருகவேள்: இவன் வேல் ஏந்தி நின்றான்; மயில் மீது ஏறிச் சென்று அயில் வேல் தாங்கிக் கடலில் சூரபதுமனைக் கொன்றான்; அவுணர்களை அழித்தான்; அவன் தன் வேலைக் கொண்டு கிரவுஞ்ச மலையைப் பிளந்தான்” எனப்பாடினர். அடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/143&oldid=936463" இலிருந்து மீள்விக்கப்பட்டது