பக்கம்:சிலம்பின் கதை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

சிலம்பின் கதை



பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கே கங்கையில் நீராடத் தான் அங்கு வந்ததாகத் தெரிவித்தான்.

பாண்டிய நாடு

“செழியன் மறைந்தபின் பாண்டிய நாடு அதன் நிலை யாது?” என்று சேரன் கேட்டான்.

“கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் என்பான் கொல்லர் ஆயிரவரைக் கண்ணகி கோயில் முன் தலை கொய்து பலியிட்டுக் கொன்று தென்னவன் செய்த குற்றத்திற்கு ஈடு செய்தான். இச்செய்தி ஊர் எங்கும் பரவியது; மெல்ல மெல்ல நாட்டில் அமைதி திரும்பியது. செழியன் அரியாசனம் ஏறினான். நாடு சீர்பெற்றது” என்ற செய்தியை அறிவித்தான்.

அந்தி நேரம் அணுகியது; வானத்தில் பிறை தோன்றி இரவு வருதலைக் காட்டியது; அதன் வண்ண அழகில் அரசன் எண்ணம் செலுத்தினான். அவன் மனம் அமைதி பெற்று இருந்தது. அருகில் இருந்த காலக் கணிதன் ஞாலம் ஆள்வோனை நோக்கி “நாள் கணக்கிட்டுப் பார்த்து இதுவரை வஞ்சியை விட்டு அங்கு வந்து திங்கள் முப்பதும் இரண்டும் ஆயின; இனி நாடு திரும்புதல் தக்கது” என்று ஏடு கூறுவதாகத் தெரிவித்தான். மாளிகை சென்று தனியே ஒய்வு எடுத்தான்.

சோழ நாடு

அதற்குள் சோழ நாட்டின் சேதிகளை அறியச் செங் குட்டுவன் விரும்பினான்; மாடலனை மறுபடியும் அழைத்து வினாவினான். “சோழ மன்னன் கிள்ளிவள வனை எதிர்த்த குறுநில மன்னர் ஒன்பதின்மரை நீ ஒரு காலத்தில் போரிட்டு வென்றாய்; அவர்கள் மறைந்தனர்; அதன்பின் எதிர்ப்புகள் இன்றி நாட்டை எழிலுறச் சோழன் ஆட்சி செய்து வருகிறான்” என்று அரசனுக்கு மாடலன் அறிவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/163&oldid=936483" இலிருந்து மீள்விக்கப்பட்டது