பக்கம்:சிலம்பின் கதை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

சிலம்பின் கதை



குமரர்கள், அடிமைப்படுத்தி அழைத்து வந்த பேடியர்கள், தமிழ் மண்ணை இகழ்ந்து பேசிய கனக விசயர் இவர்களை ஆயிரம் படை வீரர்களிடம் ஒப்புவித்து அவர்களைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு அனுப்பினான்.

இருபெரு வேந்தர்க்கும் அவர்களைக் காட்டிவர ஏவிய பின் அன்று அங்கே பாடி வீட்டில் சற்றுத் துயில் கொண்டான்.

இரவு நீங்கியது; காலைக் கதிரவன் தன் கதிர் ஒளியை வீசத் தொடங்கினான். கங்கை நதி தீரத்தில் வயல் வெளி களில் தாமரைகள் மலர்ந்தன; வண்டுகள் யாழ் ஒலி செய்தன; பொழுது விடிந்தது என்பதை அறிந்த அரசன் தன் நாடு நோக்கிப் புறப்பட்டான். குணதிசையில் சூரியன் தோன்றினான். தென்திசை நோக்கிச் சேரன் பயணமா யினான்.

சேரமா தேவி எதிர்பார்ப்பு

இவன் வருகைக்கு ஏங்கி வஞ்சி மாநகரில் சேரன் மாதேவி துயில் இன்றி வருந்திக் கிடந்தாள். அன்னத் தூவி பரப்பிப் படுக்கையின் மேலே கிடந்து அந்தக் கட்டிலின் விதானத்தை வெறிச்சிட்டு நோக்கிக் கொண்டிருந்தாள்; கதிர் செலவு ஒழிந்த கனக மாளிகையில் முத்துகள் பதித்த ஒவியவிதானம், வயிரமணிக் கட்டில், அன்னத் தூவி பரப்பிய மஞ்சம் அதில் துயிலுதல் இழந்து துயருற்றுக் கிடந்த சேரமாதேவியை அருகிருந்த பாங்கியர் ஆற்று வித்தனர்.

“தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக” எனப் பாட்டுடன் இசைத்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தினர். குற்றேவல் செய்யும் குறுகிய வடிவுபடைத்த கூனியர் களும், குறளர்களும் சென்று “பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; நறுமலர் கூந்தல் நாள் அணிபெறுக” என நற்செய்தி நவின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/165&oldid=936485" இலிருந்து மீள்விக்கப்பட்டது