பக்கம்:சிலம்பின் கதை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரந்தரு காதை

181



அழுதாள். இளம் சிறுமிகள் முதியவர்களைப் போல் கதறி அழுதது வியப்பைத் தந்தது; அங்கிருந்தவரைக் கலங்கச் செய்தது. இருவர் செட்டி மகளிர் ஆயினர். ஒருத்தி மட்டும் அந்தணன் செல்வியாயினள்; இது ஏன் என்ற ஐயம் அரசனுக்குத் தோன்றியது; அங்கு இருந்த ஏனையவர்க்கும் அது புதிராக இருந்தது.

மாடலன் அதற்குக் காரணமும் விளக்கமும் தந்தான். “கண்ணகி தாயும், கோவலன் தாயும் எந்தத் தனி அறமும் சிறப்பாகச் செய்திலர்; மாதரி தெய்வ வழிபாடு கொண்டவள்; கண்ணனை வழிபட்டாள். கோயில் பூசை களைத் தொடர்ந்து செய்து வந்தாள். அதனால் அவள் உயர் வகுப்பில் பிறந்தாள்” என்று கூறி விளக்கினான். கோயில் அர்ச்சக சாதியில் மாதரி பிறந்தது அவள் செய்த நற்கருமமே என்று விளக்கினான். தாயர் இருவரும் பாசத்தால் பிணிப் புண்டனர். ஆதலின் கண்ணகிக்குக் கோயில் எழுப்பிக்கும் சேர நாட்டில் இவ் இருவரும் வந்து பிறந்தனர்; அதே பாசம்தான் மாதரியும் கோயில் அர்ச்சகன் மகளாகப் பிறந்து அந்த ஊருக்கு வரக் காரணம் ஆகியது; எனினும் அவள் நற்செய்கை செய்தவள் ஆதலின் உயர்குடியில் பிறந்தாள் என்று விளக்கம் கூறினான். அதனால் ஒர் அற உண்மையை அறிவிக்க முற்பட்டான். “நற்செய்கைகளைச் செய்பவர் பொன்னுலகை அடைவர்; பற்றுக் கொண்டவர் அப்பற்றுகளின்படி அவர்கள் வாழ்க்கை அமையும்; நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நன்மைகளும் தீமைகளும் அடைவர். பிறப்புகள் மாறி மாறி வரும். இது உலகநெறி” என்று அறவிளக்கம் அறிவித்தான்.

“செங்குட்டுவன் சிவன் அருளால் மன்னவனாகப் பிறந்தவன், அறம் செழிக்க ஆட்சி செய்தவன்; அதனால் அவன் உயர் நிலைகளைப் பெறுகிறான்; இனியும் பெறுவான்” என்று வாழ்த்துக் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/182&oldid=936503" இலிருந்து மீள்விக்கப்பட்டது