பக்கம்:சிலம்பின் கதை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரந்தரு காதை

183



சேரனும் முன் மாடலன் தெரிவித்தபடி அவனுடன் சேர்ந்து வேள்விச் சாலை நோக்கிச் சென்றான்; வேள்வி முடித்து அதன் பயனைக் காண்பது என்பது அவன் குறிக் கோள் ஆகியது.

இளங்கோவடிகள் வரலாறு

இதனை அடுத்து இளங்கோவடிகளும் பத்தினிக் கடவுள் முன் சென்று நின்றார். அவர் எதிரே தேவந்தி மேல் கண்ணகி வந்து பேசினாள். கண்ணகி இளங்கோவின் இளமை வரலாற்றை எடுத்து இயம்பினாள்.

வஞ்சி முதுாரில் அரச மண்டபத்திடை இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் வீற்றிருக்க அங்கு அவன் தாள் நிழலில் இளங்கோ இருந்தார். அவரைப் பார்த்து அங்கிருந்த நிமித்திகன் ஒருவன், “அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு உனக்கு” என்று விளம்ப அவனைக் கோபித்து நோக்கினார் இளங்கோ. செங்குட்டுவன் முத்தவன். ஆட்சி அவனுக்குத் தான் வரவேண்டும். அதற்கு மாறாக அவன் கூறிவிட்டான். அவன் கூற்றைப் பொய்யாக்குவதற்காக வும், சேரனின் சோர்வைப் போக்குவதற்காகவும் துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் மற்றவர்கள் எண்ணிப் பார்க்க இயலாத அளவற்ற பேரின்ப நிலை அடையும் பாதையில் சென்றுவிட்டார். சிந்தை செல்லாச் சேண் நெடுந்துரத்து அந்தமில் இன்பத்து அரசு ஆள் வேந்தன் ஆகிவிட்டதாகக் கூறினாள்; நாட்டுக்கு அரசனாக ஆகாமல் பாட்டுக்கு வேந்தனாக மாறினார். உலகு ஆள் கவி வேந்தனாக ஆயினார். இந்தச் செய்தியையும் அந்தக் கடவுள்பத்தினி எடுத்து உரைக்கக் கண்ணகி கதை முடிவு பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/184&oldid=936505" இலிருந்து மீள்விக்கப்பட்டது