பக்கம்:சிலம்பின் கதை.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சிலம்பின் கதை


அறிவிக்கக் கூனி ஒருத்தியை நகர நம்பியர் திரிதரு மன்றத்துக்கு அனுப்பி வைத்தாள்.

கோவலன் அம்மாலையை ஆவலுடன் வாங்கியவனாய்க் கூனி முன் செல்ல அவளைத் தொடர்ந்து மாதவியின் இல்லத்தை அடைந்தான். அவள் அணைப்பிலே அகில உலகத்தையும் மறந்தான்; விடுதல் அறியா விருப்பினன் ஆயினான். அவளைத் தொடுதலில் கண்ட இன்பம் அவனை ஈர்த்துப் பிடித்தது. வடு நீங்கிய சிறப்பினை உடைய தன் மனைவியையும், வீட்டையும் விடுதல் செய்தான்; மறந்தான்.

மாதவி இவ்வாறு நாட்டியக் கலையை நிலைபெறச் செய்தாள். அவள் கலை நிலைபெற்றது. அரங்கு ஏறி அவள் புகழ் மிக்கவள் ஆயினாள்.


4. கண்ணகியின் பிரிவுத் துயர்
(அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை)

அந்தி மாலை

மாதவி மகிழ்ந்தாள்; கண்ணகி துயர் உழந்தாள். மாலைக் காலம் கூடியவர்க்கு இன்பம் அளித்தது; பிரிந்து வாடியவர்க்குத் துன்பம் தந்தது.

இந்த மாலைப்பொழுது நில மடந்தைக்கு வான்துயர் தந்தது. கதிரவன் மறைகிறான். கணவனைக் காணாமல் வருந்துவது போல் இம்மாநில மடந்தை வருந்தியது. அதன் திசை முகங்கள் பசந்து காணப்பட்டன. திங்களின் வருகையை அது ஆவலோடு எதிர்நோக்கியது. கணவனை இழந்து கடுந்துயர் உழந்த நிலமடந்தை தன் ஆருயிர் மகன் ஆகிய திங்கள் எங்கே உள்ளான் என்று எதிர்நோக்கி இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/21&oldid=960110" இலிருந்து மீள்விக்கப்பட்டது