பக்கம்:சிலம்பின் கதை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

சிலம்பின் கதை



இல்பொருள் உவமையணி

திங்களையும் ஞாயிற்றையும் உடன் வைத்துப் போற்றிய கவிஞர் அவை ஒருங்கு உடனிருப்பதாகக் கூறி அக்காட்சியை உவமையாக்கி உள்ளார்.

கோவலனும் கண்ணகியும் நெடுநிலை மாடத்தில் நிலவு வீசும் ஒளியில் களித்து மகிழ்வு கொள்கின்றனர். இருவரும் உடன் இருக்கும் காட்சியை ஞாயிறும் திங்களும் ஒருங்கு இருக்கும் காட்சிக்கு உவமைப்படுத்தி உள்ளார். கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோலக் கண்ணகியும் கோவலனும் உடன் இருந்தனர் என்று கூறக் காண்கிறோம்.

திங்களும் ஞாயிறும் உடன் இருத்தல் என்பது இல்லாத செய்தி, அதனை உவமமாகக் கூறியிருப்பது இல் பொருள் உவமைஅணி ஆகும்.

சிலேடை அணி

அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் மாலைக் காட்சியை வருணிக்கிறார் கவிஞர்.

“குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத்து ஊத”

என்பர்.

குழல்-மூங்கில் குழல்; குழல் - குழைவு, முல்லைப் பண்ணைக் கோவலர் பாட என்பது ஒரு பொருள். முல்லை முகையில் வாய் வைத்து ஊதுவது வண்டின் தொழில்.

ஊது குழலில் முல்லைப் பண்ணைக் கோவலர் வாய் வைத்து ஊதுகின்றனர்; குழைந்து வளரும் முல்லை முகையில் வண்டுகள் தேன் உண்ண வாய் வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/219&oldid=936542" இலிருந்து மீள்விக்கப்பட்டது