பக்கம்:சிலம்பின் கதை.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்திமாலைச் சிறப்புச் செய் காதை

23



ஏனைய மகளிர்

அந்த இரவுப்பொழுது கண்ணகியை மட்டும் வருத்தவில்லை; பெண்ணணங்குகள் பலரையும் வருத்தியது. வேனிற்பள்ளி வேதனை தரும் என்பதால் அவர்கள் கூதிர்ப் பள்ளியைத் தேடிச் சென்றனர். அதன் சாளரங்களில் தென்றல் வீசியது; பிரிந்திருந்த அவர்களை அது சுட்டது; வெம்மைப்படுத்தியது; புழுக்கத்தைத் தந்தது. அதனால் காற்றும் புகாதபடி அவற்றின் கண்களை அடைத்தனர். மாலை முத்தும், சந்தனக் கொத்தும் அவர்களுக்குக் குளிர்ச்சி தருவன; அவை அவர்களுக்கு வேதனையைத் தந்தன. அதனால் அவற்றை அணிவதைத் தவிர்த்தனர். குவளையும், கழுநீர்ப் பூவும் குளிர்ச்சியை அளிப்பன. அவற்றைத் தூவிப் படுக்கையில் படுப்பது வழக்கம். பூவின் அடுக்கு அவர்களுக்கு இடுக்கண் தந்தது. மகிழ்வை வெறுத்தனர். வெம்மைமிக்க அன்னத் தூவி விரித்த விரிப்பில் தம் இரவைக் கழிக்க விரும்பினர். அங்கும் அவர்கள் கண்கள் துயில் மறுத்தன. துயிலின்றி வருந்தினர் வறண்ட வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. அந்த இரவு அவர்களுக்குப் பகையாக விளங்கியது. ஊடல் காலத்தில் சினந்து சிவக்கும் அவர்கள் கண்கள் இந்த வாடல் காலத்தில் முத்துக்கள் என நீர் உகுத்துச் சிந்தின; தனிமை அவர்களை வாட்டியது.

புகார் நகர் மகளிர்

இப்படி ஒரு சிலர் வருந்தினர்; எனினும் பலருக்கு அது இன்ப இரவாகவே விளங்கியது. மன்மதனின் படைகள் மகளிர் கூட்டம் என்று கூறுவது மரபு; இந்த மக்ளிர் தம் செயலாற்றலால் ஆடவருக்கு இன்பம் அளித்தனர். மன்மதன் ஆட்சி அந்த நகரில் ஓங்கி விளங்கியது. யாமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/24&oldid=959697" இலிருந்து மீள்விக்கப்பட்டது