பக்கம்:சிலம்பின் கதை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் காண் காதை

87



“கவலை நீங்குக; கூடல் நகரைக் கண்டு நீ திரும்பி வருக! வெல்க” என்று கூறி விடை தந்தார்.

நகர் நுழைதல்

அகழியை அடுத்து மதில் இருந்தது; அகழியைக் கடக்கச் சுருங்கை வழி ஒன்று; அதில் யானைகள் செல்வது வழக்கம். அத்தகைய பரப்பு அது பெற்றிருந்தது. அதனைக் கடந்து மதிலுக்குச் செல்லும் வீதி வழியே சென்றான்; இந்திரன் வைத்திருந்த அணிகலப் பேழை உள் இருந்தது போல நகரின் வளமிகு காட்சி அவன் கண்ணுக்குப் புலப் பட்டது.

யவனர் அரண் காத்து நின்றனர். அவர்களுக்கு ஐயம் எழாதபடி உள்ளுர் வாசிபோல் உள் நுழைந்து சென்றான்.

பொழில் விளையாட்டு

தெருக்களில் கொடிகள் அசைந்தன; பொது மகளிர் வீட்டை விட்டுத் தம் காதலர்களுடன் சென்று படகுகளை இயக்கித் தோணிகளில் விளையாடினர். ஆற்றில் நீந்தி மகிழ்ந்தனர். புனல் விளையாட்டில் பொழுது போக்கினர்.

அடுத்துப் பொழில் விளையாட்டில் பொழுது போக்கினர். சோலைகளில் சென்று பூக் கொய்தனர். மலர்களைத் தம் கூந்தலில் சூடிக் கொண்டும், மாலைகளை அணிந்து கொண்டும், சந்தனக்குழம்பு மார்பில் பூசிய வராய்ப் பொழில் விளையாட்டில் ஈடுபட்டனர்.

கோவலன் அங்குச் சென்ற காலம் வேனிற்காலத்தின் இறுதியாகும் நகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் தம் படுக்கையில் கிடந்து பழைய நினைவு களில் மனம் செலுத்தினர். அவற்றுள் முதலாவது கார் காலம்; அது அம் மதுரை நகர மாந்தர் நினைவில் பசுமை நினைவுகளாக நிலைத்து இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/88&oldid=936401" இலிருந்து மீள்விக்கப்பட்டது