பக்கம்:சிலம்பின் கதை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைக்கலக் காதை

97



கொடுத்து உதவினான்; பிரிந்தவன் வந்து ஒன்று சேர்ந்தான். சிதைந்த வாழ்க்கை சீர்பெறச் செய்த செம்மலாக விளங்கி னான். 'செல்லாச் செல்வன்' என்று அவனை அனைவரும் அழைத்துச் சிறப்புச் செய்தனர்.

மற்றும் ஒரு நிகழ்ச்சி பத்தினி ஒருத்திமேல் பழிச்சொல் கூறி அவள் வாழ்க்கையைக் கெடுத்தான் ஒரு கயவன். அறம் அவனை ஒறுத்தது. பூதம் பாசம் கொண்டு அவனைக் கட்டி இழுத்துச் சென்றது.

நாசம் வந்து அவனை அணுகியபோது பாசத்தால் பிணிப்புண்ட அவன் தாய் அப்பூதத்திடம் முறையிட்டாள். “என் உயிர் கொண்டு அவன் உயிர் தருக” என்று வேண்டினாள். “இழிமகன் ஒருவன் உயிர்க்கு ஈடாக நல் உயிரைக் கொள்ளும் நயப்பாடு இங்கு இல்லை” என்று கூறி அவனை அவள்கண்முன் அடித்துக் கொன்றது. மனம் ஒடிந்து போனதால் நொடிந்து போனாள்; திக்கற்ற அவளுக்குத் திசை காட்டும் ஒளிக் கதிராகக் கோவலன் இருந்து அத் தாய்க்கும் மற்றும் அவனைச் சார்ந்து கிடந்த சுற்றத்தவர்க்கும் உறுபொருள் கொடுத்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் காத்து ஒம்பினான். அதனால் 'இல்லோர் செம்மல்' என்று நல்லோர் அவனைப் பாராட்டிக் கூறினர்.

ஈகையும் வீரமும் உடைய அவன் வாழ்வு நசிந்து போனது கண்டு கசிந்து வருந்தினான் மாடலன். “இம்மை யில் எந்தத் தீமையும் நீ செய்தது யான் கண்டது இல்லை; சென்ற பிறவியில் செய்த தீ வினைதான் ஏதோ ஒன்று பாழினை நல்கியது” என்று ஆறுதல் கூறினான். “கண்ணகியும் கடுங்கான் வந்து உழந்தது வருந்தத் தக்கது” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/98&oldid=936411" இலிருந்து மீள்விக்கப்பட்டது