சிலம்பு நெறி 15
எதிர்ப்பார்க்கிறது. அறியாதவர்கள் பலர்; அறிந்தவர்கள், சிலர். அறியாதவர்கள் நெறியில் நீங்கியவர்கள்.
நெறியில் நீங்கியவர்களிடம் நல்லன எதிர்பார்க்க இயலாது; முடியாது. ஆதலால் நெறியில் நீங்கியவர்கள் வருந்தத்தக்கன கூறினார்களேனும், “அவர்கள் கூறவில்லை; அவர்கள் அறியாமையின் காரணமாக கூறுகின்றனர்” என்று அறிவுடையார் கருதி அதனைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.
கவுந்தியடிகள் மா தவத்தர்; நோன்பினால் உயர்ந்தவர்; இரக்கம் பெரிதும் உடையவர். கவுந்தியடிகள் கோவலனிடம் காட்டிய பரிவை, எவரிடம் யார் எதிர்பார்க்க முடியும்? ஆயினும், கோவலன்-கண்ணகி பற்றி சிறியோர் கூறிய தீய சொற்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! சபித்துவிடுகிறார்!
மா தவத்தராகிய கவுந்தியடிகளுக்கு, மனைத்தவத்தாளாகிய கண்ணகி நெறியுணர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கவுந்தியடிகள் பிறழ்ந்தது கோவலன்-கண்ணகி மீதுள்ள பரிவினாலேயே! இயல்பாகச் சினம் கொள்பவரல்லர்; இன்றைய சமுதாய வாழ்க்கையில்,”
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்று அறிதல் வேண்டும்
(சிலப் : 10 : 237-238)
என்ற கண்ணகியின் அறிவுரை முற்றாகக் கொள்ளத் தக்க அறிவுரையாகும்.
திரிந்த கோலும் திரிந்த நிலமும் அரசியல் ஓர் அறம்; அரசியல் முறைகள் மனித குலத்துக்கு மறைமொழி போலப் பேணத் தக்கன.