பக்கம்:சிலம்புநெறி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 ஆனால், நடைமுறை என்ன? “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்பது என்னாயிற்று? தெருச் சண்டைகள்னே வளர்ந்தன! குருதிக் கலப்புடையவர்கள் கூட, சுற்றத்தாராக இல்லையே! அண்ணன் - தம்பி சண்டை, கணவன்-மனைவி சண்டை மலிந்து வருகின்றனவே! “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்!” என்பது என்னாயிற்று?

திருமுறைகளைப் போற்றிப் பூசனை செய்யும் இடங்களிலெல்லாம் சாதிவெறி முடைநாற்றம் வீசுகிறது! இன்றும் தனித்தனிப் பந்தியே போடுகின்றனர்! அது மட்டுமா? திருமந்திரத்திற்குப் புது உரை கூறுகின்றனர். சிவனை வழிபடும் உயர்ந்தோர் ஒருகுலமாம். இது சிறப்பு விதியாம். பொது விதியல்லவாம்! இது அந்தச் சாதி வெறியாளர்கள் கற்பிக்கும் அனுபவ உரை. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்”. என்பது என்னாயிற்று?

“பிறக்கும் வகையினால் ஒத்தன” என்று உரை எழுதி, உரையைக் கெடுத்ததுதான் மிச்சம்! “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!” என்பது என்னாயிற்று? இந்தப் பாடலைப் பாராயணம் செய்வோர், “தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்கள் சட்டை போட்டதால் மழை பெய்யவில்லை” என்று கூறும் அளவுக்கு அப்பரடிகளின் கொள்கை வெற்றிமுழக்கம் செய்கிறது!

இவர்கள் படித்தால் என்ன? பாராயணம் செய்தால்' என்ன? கற்றால் என்ன? கேட்டால் என்ன? திருந்த மாட்டார்கள்! மக்களாக இருந்தால் அல்லவா திருந்த? தலையெழுத்தில் கால் நீட்டியாகிவிட்டது. கால் அதிகமானால் விலங்குகள் என்றுதானே பொருள்! விலங்குகள் என்ன பாவம் செய்தன, இவர்களோடு ஒப்பிட்டுக் கூற? உவமித்துக் கூற? விலங்குகளுக்கு தோற்றம் போலவே வாழ்க்கை முறை ஏமாற்றங்கள் இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/24&oldid=1375878" இலிருந்து மீள்விக்கப்பட்டது