பக்கம்:சிலம்புநெறி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பொருள். அதனால்தானே பெற்றவளாக இல்லாத பெண்ணையும் “தாய்” என்று அழைக்கும் மரபு, மக்கள் மன்றத்தில் வழக்கில் இருந்து வருகிறது. பெண் எல்லா உயிர்களையும் பேணிக் காக்கும் இயல்பினள்.

அதனாலன்றோ ஐங்குறுநூறு அம்மையை, பங்கிலுடைய ஐயன் திருவடிகளில் உலகம் முகிழ்த்தது என்று வாழ்த்துகிறது. அம்மையோடு அப்பன் உடனுறைதலாலே உலகு இயங்குகிறது; உயிர்கள் இன்புற்று வாழ்கின்றன என்று திருவாசகம் கூறும்.

பெண்ணின் நல்லாளொடு பொருந்தியவனாக, பிரான் இருப்பதனாலேயே பெருமானுக்கு அருளிச் செயல் இருக்கிறது என்று திருமுறைகள் பறை சாற்றுகின்றன. பெண்மை என்பது மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கும் பேரருள் திறத்தது. அதனாலன்றோ கடவுளின் கருணையை, தாயன்பு போன்றது என்று உவமித்துக் கூறினர்.

உண்மையான பெண்டிர், பெண்மைக்குரிய நலமனைத்தும் அமைந்த பெண்டிர் வாழும் ஊரில் நியாயங்கள் நிலவும்; நீதி நிலைத்து நிற்கும். அங்கு யாருக்கும் துன்பம் வராது. இது தமிழ்க் கொள்கை.

கோவலன் கொலையுண்ட நிகழ்ச்சியின் மூலம் மதுரையில் அருள் நலம் காக்கும் பெண்டிர் இல்லையோ என்ற முடிவுக்கு, கண்ணகி வருகிறாள்! மதுரையில் பெண்கள் இல்லாமல் இல்லை! இருந்தனர். ஆனாலும் திண்மையும் திறனும் மிக்க பெண்டிர் இல்லை.

பெண்கள் தம் நிலை இழந்துவிட்டனர்; போகப் பொருளாக மட்டுமே இருக்கும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு விட்டனர்; இந்த இழிநிலைக்குச் சோழநாடு தள்ளப்பட்டதனால்தானே நடுச்சந்தியில் மாதவி ஏலம் கூவி விற்கப்படுகிறாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/26&oldid=1379538" இலிருந்து மீள்விக்கப்பட்டது